மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கமொன்று உதயமாகும்: ஜீ.எல். பீரிஸ்

Report Print Sinan in அரசியல்

2019ஆம் ஆண்டு இறுதிக்குள் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கமொன்று கட்டாயமாக உதயமாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, புஞ்சி பொரளையில் அமைந்துள்ள பொருளாதார ஆய்வு மையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரமென்பது முற்றிலும் ஊழல் மிக்க செயற்பாடாகும்.

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. விலை சூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்பம் முதல் மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் பெரும் விமர்சனத்திற்கு உட்பட்ட இந்த எரிபொருள் விலை சூத்திரம், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்பினை மீறி திடீரென பிரதமராக பதவியேற்றதும் இல்லாமலாக்கப்பட்டு, மூன்று முறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.

எனினும், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்று, மங்கள சமரவீர நிதியமைச்சராக பொறுப்பேற்றதும் எரிபொருள் விலை சூத்திரம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கையும் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளினால் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மீண்டும் நேற்று நள்ளிரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராகவிருந்த 51 நாளில் 3 தடவைகள் நடைமுறையிலுள்ள விலைசூத்திரத்திற்கு எதிரான ஒரு செயன்முறையின் கீழ் எரிபொருட்களின் விலைகளைக் எந்தவொரு விலை சூத்திரத்தினையும் பயன்படுத்தாமல் மூன்று முறை குறைத்தார்.

இந்த பூமியில் காலை வைத்து மக்களின் நாளாந்த பிரச்சினைகளை சாதாரண முறையில் விளங்கிக் கொண்டு செயற்படுத்திய கொள்கைகளினால் அந்தவகையிலான நிவாரணத்தினை மூன்று தடவைகள் எமது மக்களுக்கு வழங்க மஹிந்த ராஜபக்ச முன் நின்றார்.

கட்டாயமாக மஹிந்த ராஜபக்ச தலைமையின் கீழ் எமது அரசாங்கமொன்று இந்த வருட இறுதிக்குள் தோற்றம் பெறும். அந்த அரசாங்கம் ஒரு போதும் ஊழல் மிக்க பொய்யான விலை சூத்திரமொன்றினை பயன்படுத்தாது, அதனை முற்றிலும் நிராகரிக்கும்.

விலைசூத்திரம் என்பது நாட்டிலுள்ள பொதுமக்களின் பைகளினை முற்றிலும் அறிக்கும் ஒரு நடவடிக்கையாகும். எரிபொருட்களின் விலையினைக் குறைத்து மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers