மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் அறிவிப்புக்களை விடுக்க வேண்டாம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் வகையில் அறிவிப்புக்களை விடுக்காது, ஆறாம் அறிவை பயன்படுத்தி, எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதை அலசி ஆராயுமாறு மலையக சமூக செயற்பாட்டாளர்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கான அரசியல் ரீதியிலான உரிமைகளையும் வென்றெடுப்பதற்காகவே தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்குள் இருந்தபடியே போராடி வருகின்றது. மக்களுக்கான இந்த அரசியல் இராஜதந்திரத்தை, சில குழுக்கள், அரசியல் நாடகமென விமர்சிப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்.

மலையக மக்களும் நாட்டிலுள்ள ஏனைய இன மக்களைப் போல் அனைத்து உரிமைகளையும், எவ்வித பாகுபாடுமின்றி அனுபவிக்க வேண்டும் என்பது தான் எமது இலக்காகும்.

எனவே தான், அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுத்து வருகின்றோம்.

சலுகைகளை அனுபவிப்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து, கைகட்டி, வாய்பொத்தி ஆமாம் சாமி அரசியலை எமது கூட்டணி முன்னெடுக்கவில்லை. இனியும் முன்னெடுக்காது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த முறைமை மறு சீரமைப்புக்குள்ளாக்கப்பட வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்கள், சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்பது தான் எமது தூரநோக்கு சிந்தனையின் நிலைப்பாடாக உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்காகவே போராடி வருகின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களும், அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களுக்கான சம்பளம் அரச நிர்ணயங்களுக்கமைய தீர்மானிக்கப்பட வேண்டும். அந்தவகையில் முதல் முறையாக வரவு - செலவுத் திட்டம் ஊடாக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதை புதியதொரு பரிமாணமாகவே நாம் பார்க்கின்றோம்.

தொகையில் தொங்கிக்கொண்டிருக்காது, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனவே, இது மாற்றத்துக்கான ஆரம்பம் என நாம் சிந்திக்கவேண்டும். முறைமையில் மாற்றம் வந்ததானது பாரிய வெற்றியாகும். இதற்கான அரசியல் ரீதியிலான அழுத்தங்களை தமிழ் முற்போக்கு கூட்டணியே கொடுத்தது.

கிராமப்பகுதிகளில் சமுர்த்தி வழங்கப்படுகின்றது. இதற்கான கொடுப்பனவு பாதீட்டிலேயே ஒதுக்கப்படுகின்றது. எனவே, தோட்டத்தொழிலாளர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு பாதீட்டின் ஊடாக நிதி ஒதுக்குவதில் என்ன தவறுள்ளது? அதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் தாக்கம் தான் என்ன?

ஆகவே, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் வகையில் அறிவிப்புகளை விடுக்காது, ஆறாம் அறிவை பயன்படுத்தி, எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதை அலசி ஆராயுமாறு மலையக சமூக செயற்பாட்டாளர்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Latest Offers