இலங்கை இராணுவத்தை தப்பிக்க வைக்கும் சதிகளை யாழில் அம்பலப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

Report Print Dias Dias in அரசியல்

ரணிலும் மகிந்தவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொண்டு அவர்களை விட்டுவிடலாம் என்ற அடிப்படையிலாவது எரிந்து கொண்டிருக்கின்ற தீயை அணைக்கலாம் என நினைக்கின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணி மாநாடு நேற்று (16) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய தவராசா,

“லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதலாவது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், இரண்டாவது எதிரியாக பொட்டம்மான், மூன்றாவதாக சாள்ஸ், நான்காவதாக மணிமேகலை, ஐந்தாவதாகவே சிறையில் உள்ள எனது கட்சிக்காரர் உள்ளார்.

அப்படியானால் அரச தரப்புகள் கூறுவது போல முக்கியமான எதிரிகள் எங்கே? அவர்கள் இல்லை. அவர்கள் இறந்து விட்டதாக அரசு கூறுகிறது. அது வேற விடயம் இங்கு நாம் இந்த விடயத்தில் முக்கியமாக அவதானிக்க வேண்டும் என்றால் மகிந்த, கோத்தா, சரத் பொன்சேகா போன்றவர்கள் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பிரதான சந்தேகநபர்கள் அல்ல. எனவே அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருக்கின்றது.

ஆனால் போர்க்குற்றம் சாட்டப்படும் தரப்பில் உள்ளவர்கள் யார்? அனைவரும் பிரதான சந்தேகநபர்களாக இருப்பதுடன் அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றார்கள். 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் நான் திருகோணமலையில் ஓர் சித்திரவதை முகாம் உள்ளதை வெளி கொண்டு வந்தேன். அதேபோல முல்லைத்தீவில் கோத்தபாயவின் இரகசிய முகாம் இருப்பதை வெளியில் கொண்டு வந்தோம். இந்தச் சம்பவங்களுடன் படைத் தளபதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தோம்.

போர்க்குற்றம் என்பது போர்க் காலத்தில் இடம்பெற்ற விடயம். ஆனால் சாதாரணமாக பொது சட்டத்தின் கீழ் படுகொலை செய்தவர்களில் ஒருவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி இன்னொருவர் பிணையில் வெளியில் சுதந்திரமாக உள்ளார்.

மக்கள் இந்த வேற்றுமைகளை பிரித்துப் பார்க்க வேண்டும். பத்து வருடங்களின் பின்னர் மறப்போம் மன்னிப்போம் என ரணிலும், இராணுவம் குற்றம் புரிந்துள்ளதாக மகிந்தவும் கூறுகின்றனர். இதனை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ரணில் மறப்போம் மன்னிப்போம் என கூறியதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் என்ற பொறிமுறையை உருவாக்கும் சட்டவரைவை யாழ்ப்பாணம் வர முன்னர் கடந்த 12 ஆம் திகதி பிரதமர் அமைச்சரவைக்கு பாரம் கொடுத்துள்ளார்.

அதன் போது தென்னாபிரிக்க நாட்டில் இருந்ததை போல இதனை அமைக்கின்றோம். அதன்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வார்கள். இதனை நாம் எதிர்பார்க்கவில்லை.

உண்மை தெரியவேண்டும், என்ன நடந்தது என முழுமையாக அறிய வேண்டும். பிரதான சந்தேகநபர்களாக இல்லாது சிறிய உதவிகள் செய்த நபர்கள் பலர் நீண்டகாலமாக சிறையில் தடுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரணிலும் மகிந்தவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொண்டு அவர்களை விட்டுவிடலாம் என்ற அடிப்படையிலாவது எரிந்து கொண்டிருக்கின்ற தீயை அணைக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால் தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறிதல் ஆணைக்குழு தோல்வி அடைந்தது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அதனை விசாரிக்க 2 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. அது தோல்வி அடைந்தது.

அதற்கு முக்கிய காரணம் அதில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தர வந்திருந்த சிலருடன் சேர்த்து இரகசியமாக ஏனைய பலரையும் விடுதலை செய்யுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி வேலை பார்த்தார். பின்பக்க கதவாலும் ஜனாதிபதி விடுதலை செய்தார். இத்தகைய நிலை இங்கும் நடக்கலாம்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களது குறைகளை கேட்காது அவர்களுக்கு தீர்வும் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் இந்த விடுதலைகளில் பாதிக்கப்பட்டவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. எப்படி தண்டிப்பது என கூறி விடுதலை செய்தனர். இந்த வழியை பின்பற்றி இங்கும் பொறுப்புக் கூறாது தப்பிக்க கூடிய நிலை உள்ளது.

வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையின் மூன்று மொழி பிரதிகளையும் வாசித்து இருந்தால் அதில் சமஷ்டி இருக்கிறது என்பதை விளங்கி கொள்வார்கள். அதில் இறைமை பகிரப்பட்ட முடியும் என ஆழமாக கூறப்பட்டுள்ளது.

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வு இல்லையென்றாலும் அதில் ஒற்றையாட்சி சமஷ்டி இரண்டும் இணைந்த கலப்பு முறையான சமஷ்டி உள்ளது. அது வரும் வராது என விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய சூழலில் ஆயுதம் இல்லாத போராட்டமே நடக்கின்றது. இளைஞர்கள் இவற்றை ஆழமாகப் பார்க்கவேண்டும் என்றார்.

Latest Offers