அரசமைப்பு மாற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

Report Print Rakesh in அரசியல்

அரசமைப்பு மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசு தரப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 9 பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு பிரதிநிதிகள் மற்றும் தமிழர் தரப்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுகின்றனர்.

குறித்த கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி மற்றும் ஜே.வி.பி. அழைக்கப்பட்டிருப்பதான தகவல் ஏதும் இல்லை.

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றமையை அடுத்து, அது குறித்து கடந்த 20 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் இல்லத்தில் தனியாகச் சந்தித்து தமது கடும் எதிர்ப்பையும், ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் என தகவல் வெளியாகியுள்ளன.

சம்பந்தனின் அதிருப்தி நிறைந்த கருத்துகளைச் செவி மடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த நாள் தாம் நாடாளுமன்றுக்கு வருவார் என்றும், அங்கு பிரதமருடனும், சம்பந்தனுடனும் ஒன்றாகப் பேசி முடிவுக்கு வரலாம் என்றும் சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் 21 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், சம்பந்தனையும் ஒன்றாக அழைத்துச் சத்தம் சந்தடியின்றிப் பேச்சு நடத்தினார் என்றும் கூறப்படுகின்றது.

அப்போதே சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கூட்டி அரசமைப்பு மாற்றம் குறித்துக் காத்திரமான சில முடிவுகளை எடுப்பது என அங்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தத் தீர்மானத்தின் படியே இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த விவகாரம் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு மஹிந்த தரப்பினரையும் தாம் அழைப்பதாக நாடாளுமன்றத்தில் இது தொடர்பாகப் பிரதமரையும் சம்பந்தனையும் சந்தித்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். எனினும், இதுவரை இது தொடர்பான அழைப்பு ஏதும் மஹிந்த தரப்பினருக்கோ, ஜே.வி.பியினருக்கோ வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்ல, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும், ஐக்கிய தேசிய முன்னணி அரசின் சார்பில் அதில் அங்கம் வசிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், திகாம்பரம், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் நிமால் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம ஆகியோரும் இன்றைய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசமைப்பு ஒன்றை ஏற்படுத்துதல், தற்போதைய அரசமைப்பை அப்படியே மறுசீரமைத்தல், தற்போதைய அரசமைப்புக்கு முக்கிய திருத்தங்களைச் செய்தல் போன்ற பல்வேறு உபாயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.