விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளே இருந்து தீக்குளித்து வந்தவன் நான்

Report Print Sumi in அரசியல்

விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளே இருந்து தீக்குளித்து வந்தவன் நான், அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாமென வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்வியங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்த போது, ஊழல் இடம்பெற்றதாகவும், அத்துமீறிய நியமனங்கள் வழங்கியதாகவும் முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி சற்குணராஜா குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

என்னைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த ஊழல்வாதிகள் அல்ல. தீர்மானிக்க வேண்டியவர்கள் எனது மக்கள். நான் எந்தக் காலத்தில் என்ன செய்தேன் என்று தீர்ப்பளிக்க வேண்டியது மக்கள் தான். அந்த மக்கள் தீர்ப்பையே நான் வரவேற்கின்றேன்.

வழக்கு வேண்டாம் என்னிடம் அந்தளவிற்கு காசும் இல்லை. மகேஸ்வரி நிதியத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநகர சபைக்கும் மகேஸ்வரி நிதியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனோகரனுக்கும் மகேஸ்வரி நிதியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பது பற்றிப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

மாநகர சபை தேவை எனின், கடைகளை இடித்துத் தள்ளமுடியும். அல்லாவிடின், கடைகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். மனோகரன் ஏதோ ஒரு சூழ்நிலைக்குள் மாட்டிக்கொண்டுள்ளார் போல் இருக்கின்றது.

கஸ்தூரியார் வீதியில் உள்ள கடைகள் ஒப்பந்தத்திற்கு மேலாக கட்டப்பட்டு தவறுதலாக கொடுக்கப்பட்டிருந்தால், முழுமையாக கொடுக்கப்பட்டிருந்தால், அதிகாரப் பரவலாக்கல் பிழை, சட்டவரையறைக்குள் பிழை எனின் முழு அதிகாரத்தையும் ஒருவருக்குக் கொடுப்பதென்றால் சபை ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மக்களைப் பொய்யர்களாக மாற்றிப் பொய்யான தகவல்களைக் கொடுத்து ஏமாற்ற வேண்டாம். பல பேர் எனக்கு எதிராக செயற்படுகின்றார்கள். சீதைக்குத் தீக்குளித்தவன் நான்.

யார் தீக்குளிக்க வேண்டுமென்று சொன்னார்களோ, அவர்களுக்குள்ளேயே தீக்குளித்து வந்தவன் நான்.

1979ஆம் ஆண்டில் இருந்து, தீக்குள்ளேயே வாழ்ந்தவன் நான். என்னில் ஒரு தவறு இருந்திருந்தால், எப்பவோ முடிவுக்கட்டிருப்பேன். கொண்டு சென்று விசாரித்து விட்டு கௌரவமாகத் தான் கொண்டு வந்து விட்டவர்கள்.

அவர்களுக்கு ஏலாத வித்துவான்கள் இங்கு இருக்கின்றார்களோ? கதராகவும் இருக்கலாம். சாமியாகவும் இருக்கலாம். குருக்களாகவும் இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். நான் அந்த தீக்குள்ளாக வந்தவன். இதில் பிழை விட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள் என்னை விட்டிருக்க மாட்டார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றவர்களைப் போன்று, குந்தி இருந்துகொண்டு நான் கதைக்கவில்லை. அரசியல் கத்துக்குட்டியும் நான் அல்ல. அரசியல் கத்துக்குட்டிகள் எனக்குப் படிப்பிற்க கூடாது. ஆனால் உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாநகர முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் பெண்மனிக்கு இந்த விடயங்கள் தெரியாது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 24 ஆம் திகதி மாநகரசபை அமர்வின் போது பட்டியல் மாநகரசபை உறுப்பினர்களான சட்டத்தரணிமு.றெமிடியஸ் மற்றும் யோகேஸ்வரி சற்குணராஜா ஆகியோர் எமக்கு எதிராக சில அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சபையை தவறாக வழிநடத்தியிருந்தனர்.

இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கும் போது றெமிடியஸ் தேவை என்றால் நான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தால் தான் அதனைச் சந்திக்கத் தயார் என்று கூறினார்.

என்னைப் பொறுத்தவரை இவருக்கு எதிராக ஒரு நீதிமன்றத் தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய விடயத்திலான தீர்ப்பாளர்கள் மாநகர மக்களும் ஏனைய பொதுமக்களும் ஆவார்.

இவரது குற்றச்சாட்டில் புஸ்பலதா என்பவரை நான் நியமித்ததாகவும், அவர் மூலமாக சில ஆவணங்களை மறைத்ததாகவும் கூறுகிறார். நான் 1989ஆம் ஆண்டிலேயே சேவையிலிருந்து ஓய்வு பெற்றது பற்றி இந்த நாடே அறியும். அவ்வாறு இருக்கையில் இவர் குறிப்பிடும் பி.புஸ்பலதா என்பவர் 19.03.1999ஆம் திகதியே நியமனம் பெற்றுள்ளார்.

நான் ஓய்வுபெற்று 10 வருடங்களுக்குப் பின்பு நியமனம் பெற்றுள்ள ஒருவரை நான் நியமித்ததாகவும், ஆவணங்களை அவர் மூலமாக மறைத்ததாகவும் கூறுவது அபாண்டமான பொய்யாகும் என நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்தத் தகவலை மாநகர ஆணையாளரிடமிருந்து எவரும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இவர்களது கட்சியின் சிபார்சின் பேரிலேயே மாநகர பிரதேசத்திற்கு வெளியே வசித்த இவர் நியமனம் பெற்றதாக ஒரு தகவல் உண்டு.

என்னைப் பொறுத்த வரையில் நான் சேவையிலிருந்து நீங்கிய 1988/89 காலப்பகுதியில் திடீரென சேவையில் இருந்து நீங்கினேன். அதே போல 2006ஆம் ஆண்டிலும் ஒகஸ்ட் மாதம் அளவில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு காரணமாக சத்திரசிகிச்சைக்குட்பட்டு, வைத்தியசாலையில் இருக்கும் பொழுது என்னைப் பதவி நீக்க வேண்டும் என்று சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து மாநகர அலுவலகத்துக்குச் செல்லலாமலேயே நான் பதவி நீங்கினேன்.

என்னுடைய சேவைக்காலத்தில் எந்தவொரு ஆவணத்தை நானோ அல்லது வேறுநபர்கள் மூலமாகவோ மறைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. ஆகவே இவர்களுடைய வாதமே பொய்யான அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

றெமிடியஸ் எமது பகுதியிலே சிறந்த கிரிமினல் சட்டத்தரணி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அந்த வகையிலான வாதத்தையே இந்த சபையிலும் முன்வைத்திருக்கிறார்.

அடுத்து இவர்களுக்குரிய பெரிய பிரச்சினை யேகஸ்தூரியார் வீதியில் ஏற்கனவே அமைந்துள்ள ஆறுகடைகள் சம்பந்தமானது. இதுசம்பந்தமாக இவர்கள் காலத்துக்குக்காலம் என்மீது குற்றம்சாட்டி வருவதும் நான் பதிலளித்து வருவதுமாக இருந்துள்ளது.

மாநகரசபையின் முதல் அமர்விலேயே இக்கடைகள் எனது தலைமையில் கட்டப்பட்டது என்று பொய் கூறினார். இதற்கு 14.06.2018 திகதி பதிலளித்து முதல்வருக்குக் கடிதம் எழுதினேன்.

கஸ்தூரியார் வீதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள வண்ணான் குளத்திற்கு இடையில் உள்ள மாநகரசபைக் காணியை 1970களின் முற்பகுதியில் அப்போதைய முதல்வர் அல்பிரட் துரையப்பா இந்தக்கடைகளை அமைத்தவர்களுக்கு வழங்கியிருந்தார்.

அவ்வாறு காணியைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களது செலவில் கடைகளை அமைத்து உபவாடகைக்கு வழங்கி கணிசமான வருமானத்தைத் தாம் பெற்றுக் கொண்டு சபைக்கு நிலவாடகையாக சிறுதொகையை செலுத்தி வந்தனர்.

துரையப்பாவின் இறப்புக்கு பின்பு 12.08.1975இல் நான் ஆணையாளராக நியமிக்கப்பட்டேன். அதிலிருந்து நான் சேவையிலிருந்து நீங்கும் வரையான காலம் ஒரு இக்கட்டான நெருக்கடியான காலமாகும். இந்த நிலக்குத்தகை என்பது மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் பிரிவு 40 (1) இற்கு முரணானது.

இந்த சட்ட ஏற்பாட்டின் படி மாநரகசபைக்கு உரித்தாக்கப்பட்ட எந்த காணியையும் அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் அங்கீகாரம் இன்றி குத்தகைக்கு வழங்க முடியாது.

2005 இல் நான் மாநகர ஆணையாளராக நியமனம் பெற்ற போது இந்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்பொழுது எமக்கு இரண்டு தெரிவு இருந்தது.

ஒன்று மாநகரசபைக் கட்டளைச் சட்டத்தின் 42 ஏ பிரிவின் கீழ் இக்கடைகளை இடித்து அகற்றுதல்.

அடுத்தது முறையற்ற விதத்தில் காணிகளைப் பெற்றுகட்டடத்தை அமைத்து மேலும் முறையற்ற விதத்தில் உபவாடகைக்கு வழங்கப்பட்ட கடைகளை சபை உடைமையாக்கி இறுதியாக கடை நடத்தி வந்தவர்களே அவற்றை விலை நிர்ணய திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்படும் வாடகைத்தொகையை செலுத்த உடன்படவும் அந்த நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையின் பத்து வருடத்திற்குச் சமனான தொகையை பிறீமியமாக ஒரே தடவையில் செலுத்த வேண்டும் என்பது முறையாக்கல் ஆகும்.

இந்த இரண்டில் இரண்டாவது தெரிவே அமுல்படுத்தப்பட்டது. இந்த விடயங்கள் யாவும் மாநகர வருமானப்பகுதி அலுவலகர்களாலேயே கையாளப்பட்டது மட்டுமன்றி சகல தீர்மானங்களும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் யாவரும் கலந்து கொண்ட தீர்மானக்குழுக்கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்பட்டு அமுல்செய்யப்பட்டது.

றெமிடியஸ் வாதத்தின் போது கேள்விகள் கோரப்படாமலும் பணம் எதுவும் பெறப்படாமலும் இந்த முறையாக்கல் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். முன்னாள் முதல்வருக்கு நான் எழுதிய 30.04.2011ஆம் திகதி கடிதத்திலேயே தீர்மானக்கூட்ட அறிக்கையைப் பார்வையிடுமாறும் இது ஒரு முறையாக்கல் நடவடிக்கை என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த ஆறுகடைகளையும் பெற்றவர்களிடமிருந்து சபை வருமானமாக 4950,000 ரூபாய் தொகை அறவிடப்பட்டது பற்றியும் தெரிவித்திருந்தேன்.

இவற்றை எல்லாம் பரிசீலிக்கும் வாய்ப்பு அவர்கள் பதவி விலகிய காலம் வரை மட்டுமல்ல அண்மையில் தற்போதைய சபை வந்த பின்பும் எல்லா ஆவணங்களையும் பார்வையிடும் வாய்ப்பு வசதிகள் இருந்தும் இவ்வாறு திட்டமிட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதற்கான காரணம் புரிந்துகொள்ளக்கூடியது தான். இந்த ஆறுகடைக்காரர்களும் இந்தக்கட்டடத்தொகுதி அமைக்கப்படும் பொழுது தமக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று வாதாடியதும் அதற்கு யாழ்ப்பாண வணிகர் கழகம் ஆதரவு தெரிவித்தமையும் அதனால் இவர்களின் ஆறுகடைகளை வேறு நபர்களுக்கு வழங்கி கோடிக்கணக்கான ரூபாக்களைத் தாம் பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.

கட்டடம் சம்பந்தமாக என்னால் யாழ்ப்பாண நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலக்கம் 1443/2011 விசாரணைக்கு எடுக்கப்பட்ட கடைசி நாளில் எமது சட்டத்தரணி வெளிநாடு சென்றிருந்தமையினால் சமூகமளிக்கப்பட முடியாமை பற்றி நானே நேரடியாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து வேறொரு தவணை வழங்குமாறு கோரினேன்.

ஆனால் அந்தக் கோரிக்கையை நிராகரித்து இந்த வழக்கை விசாரணை எதுவுமின்றி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். அன்றையதினம் மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னராஜாவும் ஆளுநர் சார்பாக சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கில் எனது சட்டத்தரணியின் புரொக்ஸியை மாற்றி அமைக்கும் உரிமை கொண்ட நான் தவணை கேட்டும் எனது புரொக்ஸி வராத காரணத்தைக் காட்டி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தது அடிப்படை நீதியியலுக்குமாறானது என்றும் இவ்வாறான தீர்ப்புகளினால் மக்கள் நீதித்துறையில் அவநம்பிக்கை கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்று விக்னராஜாவிடம் நான் கூறியதும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.

நான் ஒப்பந்தங்களில் ஒப்பமிட்டது தவறென்று றெமிடியஸ் லாவகமாக தனக்கே உரிய பாணியில் வாதத்தை முன்வைத்தார்.

நான் எந்த முதல்வர் சார்பிலும் எந்த இடத்திலும் ஒப்பமிடமில்லை என்பதை அவரே ஒரு கட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நியமமான படிவத்தில் பொருத்தமற்ற விடயங்களை கீறி விடுவது வழமை.

மேலும், மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் 286 ஏ பிரிவின் கீழ் மேயர் ஒருவர் பதவி வகிக்காத நிலையில் மாநகர ஆணையாளர் சபையினதும் முதல்வரதும் பிரதிமுதல்வரதும் அதிகாரங்களைப் பிரயோகிக்கலாம்.

ஆகவே எம்மால் மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் சட்ட பூர்வமானவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு நான் ஒப்பமிட்டது தவறு என்று இவர் கூறுகையில்,

மாநகர ஆணையாளராக இருந்த பிரணவநாதன் முதலமைச்சருக்குத் தெளிவுபடுத்தல் கோரி கடிதம் அனுப்பியது தேவைற்றது என்று பட்டியல் உறுப்பினர் யோகேஸ்வரி சற்குணராஜா கூறுகிறார். இவர்கள் இருவருமே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

விசாரணைகுழு அமைத்தலுக்கு முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாணசபை திருத்தச்சட்டத்தின் மூலம் மத்திய உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரங்கள் யாவற்றையும் மாகாண உள்ளூராட்சி அமைச்சர் பிரயோகிக்க முடியும் என்றுள்ளது.

எனவே, அரசியலமைப்பு மூலம் மாகாணசபைகளுக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்கள் அடிப்படையில் மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் மத்திய கட்டுப்பாடு ஏற்பாடுகளுக்கு அமைய குழுக்களை நியமிக்கவும், விசாரணை செய்யவும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கு முழு அதிகாரமும் இருந்தது.

விசாரணை அறிக்கைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மாகாணசபையிலேயே வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையிலேயே எனது தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு பற்றி யாழ்.மாநகரசபையில் பேசப்படுகின்ற எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஏதோ எனது தனி அறிக்கை போல அங்கு பேசப்பட்டமை இவர்களது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுஆகும்.

இந்த கட்டட அமைப்புக்கான விண்ணப்பங்களை கோருகின்ற போது தனி ஒருவர் மட்டும் விண்ணப்பித்த பொழுது மீள் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்ற வாதம் சபையில் முன்வைக்கப்பட்ட போது தாங்கள் ஏதோ பெரிய தமிழ் தேசியவாதிகள் போன்று காட்டி தமிழருக்கு கொடுப்பதே தமது கொள்கையாகும் என்று உரத்துக் கூறினர்.

இது ஒரு வேடிக்கையான கூற்று. இவர்கள் வெளியிட்ட விளம்பரங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் மட்டுமே வெளியிடப்பட்டன.

தமிழருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றால் ஏன் சிங்களப் பத்திரிகையில் வெளியிட வேண்டும். மேலும் இந்தத் தகவல் ஏன் உள்ளூர் பத்திரிகையில் வெளியிடவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.

குறிப்பாக இந்த விடயத்தில் மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் 212 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் படி வரவுசெலவுத்திட்ட அறிவித்தல் மாநகர பிரதேசத்தில் விநியோகிக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரிகைகளில் அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக இந்த முதலீட்டாளர் தம்மை 03.10.2010 முதலில் சந்தித்துப் சேியதாக சற்குணராஜா குறிப்பிடுகின்றார். இதனைத் தொடர்ந்தே எல்லா நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெளிவு.

இந்த சிபார்சு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 45 மில்லியன் நிலையான வைப்பு என்று சபையின் கணக்காளரால் தரப்பட்ட தரவு. இதில் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உள்ளடக்கப்படவில்லை.

45 மில்லியனை வீதி அபிவிருத்திக்குச் செலவழித்தாகக் கூறுகின்றனர். இது பொய்யான தகவல் ஆகும். உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலாக 430 பேரை நியமனம் செய்து மாதாந்தம் ரூபாய் ஆறு மில்லியன் வரை செலவு செய்து, வருடாந்தம் 72 மில்லியனாக இருப்பது பற்றி 25.04.2011 ஆம் திகதி ஆளுநர் சந்திரசிறிக்கு நாம் எழுதியிருப்பதும் சுட்டிக்காட்டப்படக் கூடியது.

மிக மோசமான விடயமாக முழுச்சபையையும் உதாசீனம் செய்து முழு அதிகாரத்தையும் மாநக ரமுதல்வராகிய தனக்கே வழங்க வேண்டும் என்ற பிரேரணையை தானே முன்மொழிந்து மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் 28ஆம் பிரிவு, 32 ஆம் பிரிவு என்பனவற்றை மீறும் செயலாகும்.

எனவே, இந்த அதிகாரக்கையளிப்பு சட்டத்திற்கு முரணனானது என்பதும் விசாரணைக்குழுக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. சட்டபூர்வஅதிகாரம் இல்லாத ஒருவரால் கையொப்பம் இட்ட ஒப்பந்தம் இயல்பாக சட்ட வலுவற்றது என்பது சகல விசாரணைகளதும் முடிவாகும்.

மேலும் மாநகரசபை சட்டத்தின் 229ஆவது பிரிவின் கீழ் கோரப்படுகின்ற எல்லாக் கேள்விக் கோரிக்கைளும் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு செய்யப்படவில்லை.

மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் 28ஆம்பிரிவின் அடிப்படையில் நிதிசார்ந்த விடயங்கள் நிதிக்குழு ஊடாக சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று இருக்கையில் இந்த ஏற்பாடு சபையின் நிதி அல்லது அரசு நிதிக்கு மட்டும் பொருந்தும் என்ற இவர்களது வாதம் தவறானது. அப்படி எதுவும் இந்த ஏற்பாட்டில் இல்லை.

இந்த விடயத்தில் அரசகணக்காய்வுத் திணைக்களம் யாழ்ப்பாண மாநகர முதல்வருக்கு எழுதிய 2017ஆம்ஆண்டுக்கான அறிக்கையில் அதன் பந்தி 4:3 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல் என்ற தலைப்பில் இந்த விடயம் பற்றி கேள்வி எழுப்பி சபையின் அனுமதியின்றி சபைக்கு உரித்தான 7.29 பரப்பு விஸ்திரணமுடைய வண்ணான் குளம் காணி ஒன்று ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேபோல 2017ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபைக்கான கணக்காய்வு அறிக்கையின் பந்தி 6:10:5 (பி) பந்தியிலும் இந்தவிடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என்பது முக்கியமாகும்.

கஸ்தூரியார் வீதி ஆறு கடைகளை நான் முறையாக்கியதை தவறு என்று கூறி சபையை தவறாக தொடர்ந்து வழி நடாத்தி விடயத்தை திசை திருப்ப முற்பட்டு உள்ளனர்.

அதே நேரம் என்னுடைய செயற்பாடுகள் தவறானதாக இருக்குமானால் கணக்காய்வுத் திணைக்களம் கேள்வி எழுப்பியிருக்கும். அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

காலத்திற்குக் காலம் யோகேஸ்வரி சற்குணராஜா தமது பல்வேறு மோசடிகளையும் ஊழல்களையும் மறைப்பதற்கே என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சாட்டி வருவதும் அனைவருக்கும் தெரிந்ததே.

றெமிடியசும் அதற்கு வக்காலத்து வாங்குவது வழக்கமானதே. எமது இந்தத் தெளிவுபடுத்தல் மூலம் மக்கள் உண்மைநிலையை தெரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.