கபட நரியின் செயலில் ஈடுபடும் ரணில்: அனுரகுமார திஸாநாயக்க காட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

20வது திருத்தச் சட்டத்திற்கும், 13வது திருத்தச் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகள் சம்பந்தமாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள் 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட மாட்டாது.

தேசிய அரசாங்கம் சம்பந்தமாக விடயம் தற்போது அதிகமாக பேசப்பட்ட விடயமாக உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு சதித்திட்டத்தை அரங்கேற்றிய போது, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க குரல் கொடுத்த ரணில் விக்ரமசிங்க, தற்போது தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தேடுகிறார்.

அமைச்சு பதவிகளை அதிகரிக்கவே ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் 18 ஆகவும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் 5 ஆகவும் அதிகரிக்கும் தேவை உள்ளது. இதனை தவிர தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையில் வேறு எதுவுமில்லை.

ரணில் விக்ரமசிங்கள தற்போது கபட நரியின் செயலை செய்து வருகிறார். இதனால், தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாங்கள் உறுதியாக தோற்கடிப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் திரும்ப பெற வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.