வசந்த கரன்னாகொட சம்பந்தமான விசாரணைகள் நிறைவு: சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விடயத்தில் போலியான முறைப்பாடு ஊடாக தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக கரன்னாகொட தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகினார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கரன்னாகொட சம்பந்தமான விசாரணைகள் முடிந்துள்ளதால், கரன்னாகொடவுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் விராஜ் தயாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகினார். குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்படுவது குறித்து தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தனது தரப்பு வாதியான முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்யவதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிப்பது அவசியம் என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனர், இந்த சந்தர்ப்பத்தில் அப்படியான வாக்குறுதியை வழங்குவது சிரமம் எனக் குறிப்பிட்டுள்ளார்.