எனது உயிருக்கு ஆபத்து: முஸ்லிம் எம்.பி கருத்து

Report Print Kamel Kamel in அரசியல்

தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மகாகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய பாதாள உலகக்குழு தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த சிலர் சூழ்ச்சித் திட்டம் தீட்டுகின்றனர்.

மதுஷிற்கு எதிரான பாதாள உலகக்குழு உறுப்பினர்களைக் கொண்டு கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு, தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.

கஞ்சிபானை இம்ரான் மற்றும் மதுஷுடன் நான் இருப்பது போன்ற புகைப்படமொன்றை போலியாகத் தயாரித்து அதனை முகநூல் வழியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அண்மையில் தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் இருபது ஆண்டுகள் அரசியல் செய்யும் எனக்கு எதிராக ஒரு பொலிஸ் நிலையத்தில் கூட முறைப்பாடு எதுவும் கிடையாது.

மஹிந்த ராஜபக்ச தரப்பினை விமர்சனம் செய்யும் காரணத்தினால் இவ்வாறான அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.