அரசியல் முகாமை மாற்றிய மைத்திரி எதையும் செய்வார்!

Report Print Kamel Kamel in அரசியல்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதனையும் செய்வார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் முகாமை மாற்றிக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தண்டிக்க முடியாது ஏனெனில் அவர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார்கள் என ஜனாதிபதி கூறுகின்றார்.

அப்படியென்றால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த, கோத்தபாய, விமல், பெசில் உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தானே இருக்கின்றார்கள் ஏன் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஜனாதிபதி செய்வதறியாது ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வருகின்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றுகின்றார் என்பது நகைப்பிற்குரிய விடயமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு காரியத்தையும் செய்ய அஞ்ச மாட்டார் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.