இறை நம்பிக்கை கொண்ட எவரும் இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள்

Report Print Sumi in அரசியல்

இறை நம்பிக்கை கொண்ட எவரும் இந்த காட்டு மிராண்டித்தனமான செயலை செய்திருக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், திருக்கேதீஸ்வரம், தேவாரம் பாடப்பட்ட திருத்தலம் மட்டுமல்ல, பஞ்ச ஈஸ்வரங்களிலும் ஒன்றாகும்.

இக் கோவில் முதன் முதலாக போர்த்துக்கீசரால் தான் உடைக்கப்பட்டது. இவ்வாறான சரித்திரம் தெரியாதவர்களின் கைகளில் தான் நமது நாடும், இனமும் சிக்கித் தவித்து சீரழிந்து கொண்டிருக்கின்றது.

சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு கோவிலில், அதுவும் சிவராத்திரி தின ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில், எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த செயலை செய்தவர்கள் நிச்சயமாக இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க முடியாது.

ஏற்கனவே ஒற்றுமை இல்லாமல் பல அழிவுகளை சந்தித்த, தமிழ் மக்களிடையே மத ரீதியான உணர்வுகளையும் தூண்டி, எமது மக்களை சீரழிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கின்றது.

இச்செயற்பாட்டை எந்த வகையாலும் நியாயப்படுத்த முடியாது. காணொளியில் மிகத் தெளிவாக, பலர் பார்த்துக் கொண்டிருக்க பெண்கள் கூட, மிக ஆவேசத்துடன் செயற்பட்டு கம்பிகளை அகற்றுவதைப் பார்க்கும் போது தமிழினத்தின் சாபக் கேட்டை யாரிடம் முறையிடுவது? ஆண்டவா!

இவர்கள் அறியாமல் செய்வதை, மன்னித்துக் கொள்ளும் என்று அவரிடமே முறையிடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

வருடா வருடம் நடைபெறும் மடுமாதா திருவிழாவில், இறை நம்பிக்கையுடன் மிக அதிகளவான இந்துக்கள் கலந்து கொள்கின்றார்கள் என்பதை இந்த வளைவை இடித்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு உள் நோக்கத்தோடு தான் மதங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து, ஒரு சிலர் குளிர்காய நினைக்கின்றார்கள்.

இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அனைத்து தரப்பினரையும் தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக் கொள்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.