சிறிநேசனை மட்டும் நாங்கள் நாடாளுமன்றம் அனுப்பவில்லை!

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கம்பிரலிய திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்காக ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு போரதீவுப்பற்று பிரதேசசபை அமர்வின் போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் முயற்சியின் பயனாக இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்துள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் 12வது அமர்வு இன்று காலை போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த அமர்வின் போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

கடந்த முப்பது வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதியென்ற அடிப்படையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளமை குறித்து இங்கு உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

வீதி பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, யானைகளின் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதன்போது உரிமையோடு இணைந்த அபிவிருத்தியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுத்தரும் எனவும் போரதீவுப்பற்றுக்கு ஐந்து கோடி ரூபா கம்பிரலிய திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்காக வழங்கியதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த போரதீவுப்பற்று பிரதேசபை உறுப்பினர் விக்னேஸ்வரன், சிறிநேசனை மட்டும் நாங்கள் நடாளுமன்றம் அனுப்பவில்லை. யோகேஸ்வரன் ஐயாவினையும் அனுப்பியுள்ளோம்.

அவர் எங்கே சென்றார் என்றும் தெரியவில்லை. அவரது நிதியொதுக்கீடுகள் எதுவும் வராதது கவலையளிக்கின்றது. அவரது நிதியொதுக்கீடுகளும் எமது பிரதேசத்திற்கு வந்தடைய வேண்டும்.

அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் முயற்சியினால் 36 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்போது யானை பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் அவற்றினை வனஜீவராசிகள் அமைச்சருக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.