புதிய அரசமைப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவு! சம்பந்தனிடம் எடுத்துரைத்தார் அந்நாட்டுத் தூதுவர்

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தன்னாலான முழுமையான ஆதரவையும் வழங்கும் என அந்த நாட்டுத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய அரசமைப்புப் பணி ஓரிரு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தமது 'டுவிட்டர்' பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

ஆயினும் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பு முயற்சி தொடர்பிலேயே இந்தச் சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய அரசமைப்பு முயற்சி வெற்றியளிக்க அமெரிக்கா தன்னாலான முழுப் பங்களிப்பையும் வழங்கும் என அமெரிக்கத் தூதுவர் சம்பந்தனிடம் எடுத்துரைத்துள்ளார்.

இந்த அரசமைப்புப் பணி இழுத்தடிக்கப்படாமல் ஓரிரு மாதங்களுக்குள் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசமைப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், தடைகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கிக் கூறினார்.

அத்துடன், ஐ.நாவில் இலங்கை அரசுக்கு வழங்கப்படவுள்ள கால நீடிப்பு தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.