அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவில் இருந்து பசுக்களை இறக்குமதி செய்யும்போது இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளிற்கமைய முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த முறைப்பாடு 25 பால் பண்ணையாளர்களின் கையொப்பங்களுடன் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

20,000 பசுக்களை இறக்குமதி செய்ய கிராமிய பொருளாதார அமைச்சினால் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும், தமக்கு வழங்கப்பட்டுள்ள பசுக்கள் தரக்குறைவானவை எனவும் குறித்த முறைப்பாட்டில் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தாம் முதலீடு செய்யும் பணத்தில் எவ்வித இலாபமும் கிட்டவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் உயர்மட்ட அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் ஊழியர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் குறித்த முறைப்பாட்டில் அரசின் திட்டமிடல் நடைமுறையை மீறி சுயாதீன தொலைக்காட்சி சேவை அதிகாரிகள் செயற்பட்டதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசின் கீழ் கொண்டுவந்த நடைமுறையிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த 10 முறைப்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள 360 முறைப்பாடுகளில் 250 முறைப்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகளின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers