நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மைத்திரி, ரணில் மற்றும் மகிந்த ஆகியோர் இறுதி இணக்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இறுதி இணக்கத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் முழுமையான இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் அனுமதியையும் வழங்கியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி பிரதமர் இந்தியாவுக்கு செல்லும் முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் விரிவாக கலந்துரையாடி இறுதி இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் சந்தித்து இது குறித்து மேலதிகமாக கலந்துரையாடியுள்ளதுடன் விசேட திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதனடிப்படையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பான யோசனையை ஜனாதிபதி சிறிசேன, அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் அடுத்த சில தினங்களில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழித்த பின்னர், மைத்திரிபால சிறிசேன பெயரளவிலான ஜனாதிபதியாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட உள்ளார்.

இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் யோசனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...