வடக்கு, கிழக்கிற்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதி: நன்றி கூறும் அமைச்சர் றிசார்ட்

Report Print Steephen Steephen in அரசியல்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், கமத்தொழிலாளர்கள் உட்பட முழு நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சமர்ப்பித்த 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இம்முறை மக்களுக்கு சார்பான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் அமுல்படுத்த முடியும் என அரசாங்கத்தின் கூட்டணி கட்சி என்ற வகையில் நாங்கள் நம்புகிறோம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கும், போரில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றவும் வரவு செலவுத்திட்டத்தில் இடமளித்து, நிதி ஒதுக்கியமை குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரையும் சமமாக நடத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமையே இதற்கு காரணம். இந்த காலத்தில் நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்தது. எமக்கு மக்களுக்கு சேவைகளை செய்ய முடியாமல் போனது எனவும் றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.