கோத்தபாயவிற்கு மறுக்கப்பட்டது அழைப்பு! ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கண்டியில் மார்ச் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து யார் பொது வேட்பாளராக களமிறங்குவார்கள் என்னும் கேள்வி இப்பொழுதுவரை பெரும் குழப்பமாகவே இருந்துவருகிறது.

அக்கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், கோத்தபாய ராஜபக்ச தான் அடுத்த பொதுவேட்பாளர் என்று பரவலாகப் பேசப்பட்டது. இதேவேளை விமல் வீரவங்சவும் கோத்தபாயவை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுவந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் கண்டியில் நடத்தப்படவுள்ள பேரணியில் கோத்தபாய ராஜபக்ச, முதலாவது அரசியல் மேடையில் ஏறவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.

எனினும், கோத்தபாய ராஜபக்சவை பொதுவேட்பாளராக நிறுத்துவதை அவரின் சகோதரன் பசில் ராஜபக்ச விரும்பவில்லை என்றும், கோத்தபாய ராஜபக்சவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் பசில் குறிப்பிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கோத்தபாய ராஜபக்ச கண்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இது தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து எவரும் கருத்துச் சொல்லவில்லை. கோத்தபாய கூட இது தொடர்பாக மௌனமாக இருந்தார்.

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கோத்தபாய ராஜபக்ச, மார்ச் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதில் நான் பங்கேற்கமாட்டேன்.

நான் அரசியலில் நுழைவதற்கு இன்னமும் காலம் உள்ளது, நேரம் வரும் போதும், நான் அரசியலுக்கு வருவேன். என்று குறிப்பிட்டுப் பேசிய அவர், தேர்தல் தொடர்பிலோ அல்லது வேட்பாளர்கள் தொடர்பில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்தோ எதையும் குறிப்பிடவில்லை.