வடக்கு - கிழக்கு மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வரவு செலவுத்திட்டம்!

Report Print Navoj in அரசியல்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத்திட்டமானது வடக்கு - கிழக்கு மக்களுக்கு அதிக நிவாரணத்தை வழங்கக் கூடியதாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது மக்களை வலுவூட்டல் , வறிய மக்களை பாதுகாத்தல், என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா ஆகிய தொனிப்பொருளில் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த வரவு செலவு திட்டமானது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தியதாக அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

அத்துடன் யுத்தத்தினாலும் , இயற்கை அனர்த்தங்களாலும் பின்னடைந்து இருக்கின்ற வடக்கு - கிழக்கு மக்களுக்கு அதிக நிவாரணத்தை வழங்கக் கூடியதாக வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு , மேம்பாட்டு வேலைத்திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

அத்துடன் எமது அமைச்சின் மேம்பாட்டு நடவடிக்கைளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சமூக வலுவூட்டலுக்காகவும், சமூர்த்தியை மீள கட்டமைத்து பயனாளர் எண்ணிக்கையை 6 லட்சத்தால் அதிகரிக்கவும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.