இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு

Report Print Sumi in அரசியல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டை நேற்றைய தினம் சந்தித்துப் பேசியுள்ளார்.

குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி ஆர்னோல்டிடம் கேள்வி வினவப்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கையில்,

மக்கள் பெரும் அச்சத்தோடு இருக்கின்றனர். நம்பிக்கையை இழுந்துவிட்டனர். காரணம் என்னவென்றால் இலங்கை மீதான ஐ.நா வின் 30.1 தீர்மானம் மற்றும் 34.1 தீரமானங்கள் ஊடாக மக்கள் எதிர்பார்த்திருந்த நீண்டகால அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற அரசியல் புரட்சியுடன் நாடாளுமன்றில் 2/3 பெரும்பாண்மை இல்லாது போனதுடன் நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டது.

பெரும்பாண்மை கிடைத்தால் மாத்திரமே இது சாத்தியம். எனவே மக்கள் அந்த நம்பிக்கையை இழந்து விட்டனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான நாட்களுக்கு மேற்பட்ட போராட்டங்களுக்கு இதுவரை விடை காண முடியாதுள்ளது.

இதற்கு எவ்வாறாயினும் விடை கண்டாக வேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்பதற்கான பதிலை உரிய தரப்பினர் முன்வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை உருவாக்கியிருந்தாலும், உரிய காலத்தில் ஆரம்பிக்காது காலம் தாழ்த்தியமையே பாரதூரமாக அமைந்தது.

எனவே ஒவ்வொரு விடயங்களும் உரிய காலத்தில் செய்யப்படாது காலம் தாழ்த்தி மேற்கொள்ளப்படுவதே இந்த அவ நம்பிக்கைக்குரிய காரணம். எனவே காணாமல் போனவர்களுக்கான பதிலை அரசாங்கம் சொல்ல வேண்டும். அரசிற்கு பொறுப்பு உள்ளது. அதற்கான பொறிமுறை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ் விடயத்தில் முழுமையாக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏன் என்றால் மக்கள் 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தான் ஏகோபித்த உரிமையை தந்தார்கள்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்கும் போது இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளதா? நோக்கங்கள் அடையப்பட்டுள்ளதா? என தூதுவர் வினவியுள்ளமைக்கு இவ்வாறு யாழ். மாநகர முதல்வர் பதிலளித்துள்ளார்,

நோக்கங்களில் பல அடையப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். பாரிய அளவில் முயற்சிகளும் எட்டப்படவில்லை. ஆயினும் ஒன்றுமே நடக்கவில்லை என்று இல்லை. சில முக்கிய விடயங்களை செய்து முடித்துள்ளோம். அவற்றுள் ஒன்று ஜெனிவாவிற்கான பிரேரணையினை நிறைவேற்றப்பட்டது.

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், இங்குள்ள இளைஞர் யுவதிகளை புலம் பெயர் தேசத்திற்கு செல்ல உத்வேகங்களை கொடுக்கின்றதே தவிர நாங்கள் அரசியல் ரீதியான உரிமையைப் மீளப்பெறுவதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களை எமது மண்ணிற்கு கொண்டு வந்து அரசியல் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்கு அழைப்பு விட்டுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எங்கள் எதிர்கால சந்ததி புலம்பெயர் தேசத்திற்கு செல்ல நினைக்கிறது ஒரு ஆபத்தான நிலையாகும்.

இதன்போது புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து பேசும் போது அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருப்பதாகவும், அதற்கான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும் என்ற கருத்தினையும் தூதுவர் பதிவு செய்து கொண்டதுடன், ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு வழங்கப்படுகின்ற கால அவகாசத்தினால் மாத்திரமே இலங்கையின் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து கொண்டு இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க முடியும் என்றும் இல்லாவிட்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல் இல்லாது போய்விடும் என்ற கருத்தை தூதுவரே குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அதே கருத்தையே கூட்டமைப்பும் வலியுறுத்தி வருவதனை தான் அறிந்துள்ளதாகவும், அது வரவேற்கதக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் தூதுவருடன் அமெரிக்க தூதுவராலயத்தின் பொது விவகார அலுவலர் டேவிட் ஜே மெக்குரி – (DAVID J MCGUIRE ), அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவு தலைவர் அந்தோனி எப். ரென்சுலி (ANTHONY F RENZULLI), மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.