பெண்களால் சிகரத்தை அடைய முடியும்: ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி

Report Print Gokulan Gokulan in அரசியல்

சமூகத்தினால் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று அவளால் சிகரத்தை அடைய முடியும் எனவும், நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகளின் மூலம் அதை நிரூபித்து உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விடுத்திருக்கும் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

பெண் என்பவர் அகிம்சையின் மறுவுருவம் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார். இருப்பினும் சமூகத்தினால் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று அவளால் சிகரத்தை அடைய முடியும் என நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கின்றாள்.

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கும் இலங்கை, அநேக ஆசிய நாடுகள் வாக்குரிமையை வென்றெடுப்பதற்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட முதல பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமையை பெற்றிருக்கின்றது.

கடந்த வருடம் பி.பி.சி உலக சேவையின் மூலம் பட்டியலிடப்பட்ட உலகத்தினர் மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய பெண்கள் வரிசையில் கடல்வாழ் உயரினங்கள் பற்றிய விஞ்ஞானி, புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்தத்தக்க சாதகமான மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்ட இலங்கையின் பெண் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆகியோரும் இடம்பிடித்து உலகத்தின் கௌரவத்திற்கு ஆளானார்கள்.

அத்தோடு எவரெஸ்ட் உச்சியை எட்டிய பெண்களின் வரிசையில் கடந்த வருடம் இலங்கை பெண்மணி ஒருவரும் இணைந்து கொண்டமையும் இலங்கைக்கு கிடைத்த ஒரு பெருமையாகும்.

இவை எமது நாட்டுக்கு எதேச்சையாக கிடைத்த பெருமையல்ல. போசாக்குமிக்க உணவு, கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை பெற்றுகொள்வதற்கும் சமூக, கலாச்சார அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்கும் ஒரு ஆணுக்கோ அல்லது ஆண் பிள்ளைக்கோ இருக்கும் உரிமைக்கு சமமான உரிமையே பெண்ணுக்கும் பெண் பிள்ளைக்கும் இருக்கின்றது என்பதை ஒரு நாடு என்ற வகையில் ஏற்று, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான வேலைத் திட்டங்களை செயற்படுத்தியதன் விளைவே ஆகும்.

ஆயினும் அவை இத்தோடு நிறுத்தப்பட வேண்டியவை அல்ல.

சமூகத்தில் பெண்ணுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக எழும் சகல வன்முறைகளையும் வேறுபாட்டை வெளிப்படுத்தும் பராமரிப்புகளையும் அடியோடு அகற்றுவதற்கும் சமமானவர்கள் என்ற வகையில் வருமானங்களை ஈட்டுவதற்கும் அது பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கும் அரச சேவையில் உச்சியை அடைந்தது போல் அரசியல் தீர்மானங்களை இயற்றும் இடங்களிலும் முதலிடம் வகிப்பதற்கும் அத் தீர்மானங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அத்தகையதோர் உயரிய நிலைமைக்கு இலங்கை பெண்களை கொண்டு செல்லும் இலக்குடன் இலங்கையில் கொண்டாடப்படும் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அந்த செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணித்துள்ளனர்: பிரதமர்

உலகில் நிலைபேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், பெண்கள் அளவிலாத அர்ப்பணிப்புக்கள், தியாகங்களைச் செய்து சிறந்த முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துள்ளனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்திருக்கும் சர்வதேச மகளிர் தினச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த சமூகமொன்றுக்குப் பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க பங்களிப்பினைப் பாராட்டி, ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோம்.

ஆண் மற்றும் பெண்ணின் சமமான சமூகப் பயன்பாட்டினை வலுவூட்டுவதற்கு மிகவும் பொருத்தமான சிறப்பான சந்தர்ப்பமொன்று இன்று உலகில் உருவாகியுள்ளது.

தற்போது புதிய உலகில் தொழில்நுட்பம், தொடர்பாடல், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது.

அதேபோன்று உலகில் நிலைபேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், பெண்கள் அளவில்லாத அர்ப்பணிப்புக்கள், தியாகங்களைச் செய்து சிறந்த முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

Latest Offers