சம்பந்தன் தலைமையிலான குழு ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளது

Report Print Sumi in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தி தருமாறு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.

பிரதமருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பின் போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் பிரசன்னமாகியுள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக தனது அமைச்சின் இராஜாங்க அமைச்சரான ஹரீஸிடம், அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரியப்படுத்திய போது அதற்கு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போது மிக காரசாரமாக அவ்விடயத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸை மீறி எதுவும் செய்ய மாட்டேன் என பிரதமர் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்ட காலத்தில் வாக்குறுதியினை வழங்கி விட்டு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தத்தின் பேரில் பிரதமரும், அமைச்சரும் சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்த காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது எனவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் நடவடிக்கையினை எடுக்க வேண்டுமெனவும் தனது கட்சித் தலைவரை இராஜாங்க அமைச்சரான ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக பிரதமருடன் தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,கடுமையான நிலைப்பாட்டையும் தெரிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.