ஐ.தே.கட்சி தலைமையில் மே மாதத்தில் மலரும் மெகா கூட்டணிகள்!

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் மே மாதம் மலரவுள்ளது. இதற்கு கட்சியின் மத்திய செயற்குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு பங்காளிக் கட்சிகளும் பச்சைக்கொடி காட்டிவிட்டன. எனவே, எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தின்போது, புதிய அரசியல் கூட்டணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, நவசமசமாஜக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.

புதிய அரசியல் கூட்டணி அமையும் என நாட்டில் அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து உருவாக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணியும் மே மாதத்திலேயே உருவாகும் என அறியமுடிகின்றது.

மே மாதத்துக்கு முன்னர் மலரும் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும் வரவு - செலவுத் திட்டக் கூட்டத் தொடர், தமிழ் சிங்களப் புத்தாண்டு உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்தில்கொண்டே மே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.