கிழக்கில் உள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

Report Print Kumar in அரசியல்

நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் முதலாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றிரவு செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில்லரைத்தனமான கருத்துகளுக்கு செவிமடுக்காமல் இந்த அரசாங்கத்தினை அத்திவாரமாக கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த முன்வர வேண்டும்.

1989ஆம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட 28 உப பிரதேச செயலகத்தில் 27 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டும் இதுவரையில் தரமுயர்த்தப்படாமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே நாங்கள் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினை பெற்றுக் கொண்டோமே தவிர தனிப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படவில்லை.

எதிர்வரும் 19ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் தமது ஆதரவினை வழங்க முன்வர வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்காது, சர்வதேச தலையீட்டை ஐ.நாவில் கோரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.