மகிந்தவின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட மைத்திரி! நழுவிக் கொண்ட கோத்தபாய?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் குழப்பங்கள் இன்னமும் தீர்ந்துவிடாத நிலையில், இலங்கை அரசியல் பொருளாதாரம் பெரும் மந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் புதிய வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. நிதியமைச்சர் மங்கள சமரவீர சில சலுகைகளை அள்ள வீசியிருக்கிறார். இது குறுகிய ஆறு மாதங்களில் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தவரவு செலவுத்திட்டமானது அடுத்த பொதுத் தேர்தலையையும் ஜனாதிபதி தேர்தலையும் இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி அடுத்த ஆட்சியையும் கைப்பற்றும் என்று அண்மையில் பேசிய மங்கள குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த அரசாங்கத்தை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம் என்று சூளுரைக்கிறது மகிந்த அணி. இந்நிலையில் ரணில் தலைமையிலான அணியை தகர்ப்பதற்கு மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் இணைந்தாக வேண்டும் என்னும் கோரிக்கை அக்கட்சிக்குள் அடிக்கடி எழுப்பப்படுகிறது.

ஆனால், கூட்டுச் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதில் மகிந்த மைத்திரி இருவரும் இன்னமும் சரியான மையக்கோட்டுக்குள் வரவில்லை என்கின்றன கொழும்புத் தகவல்கள்.

அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கண்டியில் நேற்றைய தினம் பேரணி ஒன்றை நடத்தியிருந்தது. ஆனால் இப்பேரணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை என்கின்றன தகவல்கள்.

எதிர்வரவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து களம் காணும் என அக்கட்சியினர் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் மகிந்த தலைமையில் நிகழ்ந்த முதல் கூட்டத்தில் மைத்திரிபால கலந்து கொண்டமை மகிந்த ராஜபக்சவிற்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏனெனில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்தே இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாகவும், அதில் மகிந்தவுடன் மைத்திரிபால சிறிசேனவும் மேடையில் கலந்து கொள்வார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் மைத்திரிபால சிறிசேன வராமல் விட்டது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்படுவார் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், கோத்தபாய ராஜபக்சவை நிறுத்தினால் சிறுபான்மை வாக்குகளை மொத்தமாக இழக்க வேண்டிவரும் என பசில் ராஜபக்ச கடும் அழுத்தமாக தெரிவித்ததையடுத்து கோத்தபாயவின் ஜனாதிபதி கனவும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இதனால் அடுத்த தெரிவு யாராக இருக்கும் என்னும் கேள்வி எழுந்திருக்கும் நிலையிலும், தனது முதலாவது அரசியல் மேடையாக கோத்தபாய கண்டி கூட்டத்தைப் பயன்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில், பசிலின் விடாப்பிடியினால் அதுவும் தகர்ந்து போனது. இதனையடுத்து இக்கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச மெதுவாக ஒதுங்கிக் கொண்டார்.

இக்கூட்டத்திற்கான அழைப்பு தனக்கு வரவில்லை என்று வெளிப்படையாகவே குறிப்பிட்ட கோத்தபாய, கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

எவ்வாறாயினும் இரு பெரும் கூட்டணியாக களமிறங்கவிருந்த மகிந்த மைத்திரி தலைமையிலான கட்சியின் கூட்டணி பேச்சுக்கள் இன்ன இறுதி முடிவுகள் எட்டப்படாததையடுத்தே மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இக்கூட்டத்தை தவிர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இக்கூட்டத்தில் எவரும் பங்குபற்றக் கூடாது என்று ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.