போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: யோகேஸ்வரன்

Report Print Kumar in அரசியல்

போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

வடகிழக்கின் அபிவிருத்திக்காக இந்த வரவு-செலவுத்திட்டம் ஊடாக 5000மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவே அந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த வரவு செலவு திட்டத்தில் வடகிழக்கு மாகாணம் தொடர்பில் சில முன்மொழிவுகளை அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் அதனை எந்தளவுக்கு நடைமுறைப்படுத்துகின்றது என்பதை பார்த்தே அதனை தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் கடந்த காலத்தில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எந்த தீர்மானத்தினையும் எடுக்காத நிலையில் ஏப்ரல் 05ஆம் திகதி காலை அது தொடர்பான தீர்மானத்தினை எடுக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது தொடர்ச்சியான கவனத்தினை செலுத்தவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.

ஐநா மனித உரிமைகளினால் பரிந்துரைக்கப்பட்ட சிலவற்றை தற்போதைய அரசாங்கம் செய்திருந்தாலும் பல விடயங்களை இழுத்தடித்தே வருவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் மேற்பார்வை அதிகமாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.

ஐநா பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்வதில் சீனாவின் செயற்பாடு பல தடைகளை ஏற்படுத்துகின்றது. மகிந்தவின் ஆதரவு நிலைப்பாட்டினை சீனா கொண்டிருப்பதன் காரணமாக ஐ.நா.வின் பல தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.

சீனா போன்ற நாடுகள் பாதுகாப்ப சபையில் இருக்கும்போது இலங்கை தொடர்பில் தீர்மானங்களை கொண்டுவருவது எந்தளவு சாதக நிலையிருக்கின்றது என்றாலும் பாதுகாப்பு சபைக்கு இலங்கை கொண்டுசெல்லப்பட்டு இங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கின்றோம்.

கடுமையான போர்க்குற்றத்தினை இந்த நாட்டில் ஆட்சிசெய்த ஒரு அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. அதற்கான நீதி நியாயங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றார்.