வடக்கின் மீது சீனாவின் பார்வை!

Report Print Hariharan in அரசியல்

பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை அண்மையில் தாக்குதல் நடத்திய சில தினங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்த போது, மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பிரிவினரால் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தவின் விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்தார்.

இந்தியா- பாகிஸ்தான் பதற்ற நிலைக்குறித்து அவர் கலந்துரையாடினார் என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதற்கு ஆதாரமாக படங்களும் வெளியிடப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தவினை தேடி இந்தியத் தூதுவர் சென்றிருந்தமை பலருக்கு ஆச்சரியம் தான். இந்தியாவுக்கும் அவருக்கும் சுமூகமான உறவுகள் இருப்பது போல காட்டிக் கொண்டாலும் இன்னமும் அப்படியான நிலை ஏற்பட வில்லை.

51 நாட்கள் ஆட்சியின் போது, மகிந்தவை இந்தியத் தூதுவர் எட்டிக்கூடப் பார்க்க வில்லை. அப்படியான சூழலில் மகிந்தவின் வீட்டுக்கே சென்று பார்வையிட்டது இந்தியத் தரப்பின் நிலைப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமாக இருக்குமோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால் அரசியலில் நிலையான எதிரிகளும் இல்லை நண்பர்களும் இருப்பது இல்லை.

இந்த செய்திகள் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் இந்தியத் தூதுவரின் தரப்பில் இருந்தும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. புல்மாவில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை இந்திய தூதுவர் சந்தித்து விளக்கமளித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இலங்கையின் தலைவர்கள் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடுவது என்பது வழக்கம். ஆனால், அதனையே தனக்கு சார்பாக மகிந்த அரசியலாக்க முயற்சித்துள்ளார் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. இதேவேளை, மகிந்த இந்தியாவின் தயவுக்காக கை நீட்டுகின்றார் என்பது தெளிவாகவே தெரிகின்றது.

எனினும், இந்தியா அதனை பற்றிக் கொள்ளும் நிலை இருக்கின்றதா? அல்லது இனியும் இருக்குமா என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

அது ஒரு புறம் இருக்க கடந்த வாரம் சீனத் தூதுவர் செங் ஷியுவான் இரண்டு நாட்கள் பயணமாக வடக்கிற்கு சென்றிருந்தார். தனது அதிகாரிகள் குழுவுடன் வடக்கு சென்ற அவர் யாழில் பல்வேறுத் தரப்புகளுடன் கலந்துரையாடலினை நடத்தியிருந்தார்.

அடுத்து தலை மன்னாருக்கு சென்று இறங்குதுறையினை பார்வையிட்டுள்ளார். பின்னர் இந்தியா மற்றும் இலங்கையினை பிரிக்கும் பாக்குநீரினை அமைந்துள்ள ஆதாம் பாலம் எனப்படும் திட்டுக்களையும் படகில் சென்று பார்வையிட்டுள்ளார். சீனத் தூதுவரின் இந்த பயணம் அவர் கலந்துரையாடிய விடயங்கள் என்பவற்றை கொண்டு சில அனுமானங்களுக்கு வர முடியும்.

வடக்கில் புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு சீனா திட்டம் தீட்டியுள்ளது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கில் நெடுஞ்சாலை அமைப்புப் பணி உள்ளிட்ட ஒரு சில திட்டங்களைதான் சீனா முன்னெடுத்திருந்தது. பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டிய போதும் இந்தியா அதற்கு இடம் அளிக்க வில்லை. இந்தியா அதனை தடுத்திருந்தது. பல இராஜதந்திர வழிமுறைகளை பயன்படுத்தி இந்தியா அதனை தடுத்திருந்தது.

இதனால், தென் பகுதியை சீனாவும் வடக்கு, கிழக்கு பகுதியை இந்தியாவும் பார்த்து கொள்வது என்ற எழுதப்படாத சாசனமாகவே இருந்தது. திட்ட நடைமுறைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கில் மாத்திரம் இந்தியா கவனம் செலுத்துகின்றது. தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றது. சிங்களவர்களை ஓரம் கட்டப்பார்க்கின்றது என்ற கருத்துக்களும் இதனால் பரவ தொடங்கியது.

இலங்கை இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்தி கொள்வதாக இருந்தால் தமிழர்களுடன் மாத்திரமே நின்று விடக் கூடாது, தென்பகுதி சிங்களவர்களுடன் தொடர்புகளையும் வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இந்தியா வந்தது.

அதற்கு அமைய ரயில் பாதை உள்ளிட்ட பல திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் தமது நடவடிக்கைகளை தென்பகுதிக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளாமல் வடக்கு நோக்கியும் கவனம் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

கடந்த வருடம் சீனா சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்றிடம் தமிழர்களுடனும் தொடர்பினை வலுப்படுத்த விரும்புவதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வேறு சில வழிகளிலும் சீன இராஜதந்திரிகள் இந்த கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதற்கான எந்த பதில்களும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்போது சீனத் தூதுவரின் யாழ். பயணம் அந்த உறவை விரிவுபடுத்தும் திட்டத்தின் முதற் படியாகவே பார்க்கப்படுகின்றது. வடக்கில் பொருளாதார, கலாச்சார,கல்வி குறித்து ஆராயும் நோக்கில் சீனத்தூதுவர் தலைமையிலாக குழு யாழில் ஆலோசணை நடத்தியிருக்கின்றது.

மொத்தத்தில் யாழினை உள்ளடக்கிய வடக்கின் மீது சீனாவின் கவனம் திரும்பப் போகின்றது என்பதையே இது காட்டுகின்றது.

வடக்கில் சீனாவின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமா, அதற்காக இராஜ தந்திர வாய்ப்புகள் உள்ளனவா என்ற கேள்விகள் இருக்கலாம்.

ஆனால், வடக்கு தொடர்புகளை சீனா வலுப்படுத்த விரும்புகின்றது என்பது மட்டும் உறுதி. வடக்கில் பாரிய முதலீடுகளை முன்னெடுக்கவே இந்தியாவினால் தடைபோட முடியும். கல்வி, பொருளாதார மற்றும் கலாசார திட்டங்களை முன்னெடுக்கும் போது தடை போடுவது கடினம்.

எனவே சீனாவும் எடுத்த எடுப்பில் வடக்கின் மீது பாரிய அளவில் பாயாது, சிறிய அளவில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, அல்லைப்பிட்டியிலும், மாந்தையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சீனாவின் கப்பல் போக்குவரத்து வணிகம் தொடர்பான அகழ்வுகளை சீனா மேற்கொண்டிருந்தது.

இதன் மூலம் சீனாவுக்கும், வடக்கிற்கும் இடையில் பண்டைய காலம் தொட்டே நெருக்கமான உறவுகள் இருந்தன என்பது உறுதியாகின்றது. அடுத்தக்கட்டமாக அதனை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers