தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று கலந்துரையாடவுள்ளது ஜே.வி.பி

Report Print Rakesh in அரசியல்

20ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜே.வி.பி இன்று கலந்துரையாடவுள்ளது.

இதற்கு முன்னர் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஜே.வி.பியினர் கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜே.வி.பி. கலந்துரையாடவுள்ளது. பிற்பகல் 2 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

20ஆவது அரசமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றத்திலேயே தடைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை ஜே.வி.பி முதலில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது, கொள்கை அடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தாம் இணங்குவதாகவும், எனினும் சில சில பிரச்சினைகள் உள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடவுள்ள ஜே.வி.பியினர், இவ்வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.