இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை! சம்பந்தன் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை அரசு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மட்டும் எடுத்தது.

அதில் முன்னேற்றங்கள் எதுவும் காணப்படவில்லை. பல பரிந்துரைகள் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை. இதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகக்கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதியைக் கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.

அதேவேளை, இலங்கை அரசுக்கும் எச்சரிக்கையுடன் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றோம். அதாவது, கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடாது இனியாவது அரசு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இல்லையேல் பாரதூரமானபின்விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.