ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை: மாவை சேனாதிராஜா

Report Print Gokulan Gokulan in அரசியல்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால் ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினையை தீர்க்கும் என்ற வாக்குறுதியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதியால் 62 இலட்சம் தமிழ் மக்கள் ஏமற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் 2015ஆம் ஆண்டு தேசிய அரசில் நாங்கள் சம்பந்தப்படவில்லை. அப்பொழுது நாங்கள் அமைச்சராகவும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஓரளவு எமது வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவு திட்டத்தை எண்ணி ஆறுதல் பெறுகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவில்லை. உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. பொறுப்புக்கூறும் கடப்பாடும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் நிதி அமைச்சரும், பிரதமரும் இணைந்து பிரேரணை ஒன்றை முன்வைத்து யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், அவர்கள் பற்றிய முழுமயான விபரங்கள் பற்றியும், இழப்புக்கள் பற்றியும் மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை, அதிலிருந்து விலகி நிற்போம் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

எனினும் மனித உரிமை ஆணையாளரின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி எதிராக இல்லாது இருக்க வேண்டும். அதேபோன்று அரசாங்கமும் ஆதரவு வழங்க வேண்டும்.

அரசியலமைப்பை மீறி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயற்பட்ட போது உலக நாடுகள் முழுவதும் அதற்கு எதிராகவே இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.