ஐ.நாவுடன் முட்டி மோத முடியாது! ரணில்

Report Print Rakesh in அரசியல்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எமது நாட்டுக்குச் சவால் மிக்கது. இது தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஜெனிவாவிலும் வைத்து அறிவிக்கப்படும். இலங்கை தொடர்பில் இம்முறையும் ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு நாம் இணை அனுசரணை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் சாத்தியமான விசாரணை, ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்படுதல், இலங்கையைத் தொடர்ந்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருத்தல் ஆகிய பரிந்துரைகளை உள்ளடக்கி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் காட்டமான அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் நேற்று தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் அறிக்கையை நான் உன்னிப்பாகப் பார்த்தேன். அதில் எமது நாட்டுக்கு சவால்மிக்க பல விடயங்கள் உள்ளன. இது தொடர்பில் உடன் கருத்துத் தெரிவிக்க முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி விரிவாக ஆராயும். அரசின் நிலைப்பாட்டை எமது உயர்பீடம் விரைவில் அறிவிக்கும். எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஜெனிவாவிலும் வைத்து அறிவிக்கப்படும்.

இலங்கை தொடர்பில் கடந்த முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினோம். நாட்டின் நலன் கருதி இதனைச் செய்தோம்.

இம்முறையும் ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு நாம் இணை அனுசரணை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஐ.நாவைவோ அல்லது சர்வதேச சமூகத்தையோ பகைத்துக்கொண்டு எம்மால் செயற்பட முடியாது. அதற்காக நாம் நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றோம் என்று எவரும் நினைக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.