இலங்கை அரசை நம்புவது அபத்தமானது! ராமதாஸ் வலியுறுத்தல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கையில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான அனைத்துக் கதவுகளையும் மூடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இனியும் இலங்கை அரசை நம்பிக் கொண்டிருப்பது அபத்தமாகவே அமையும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கைப் போர்க்குற்றம் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் மிக முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அது குறித்து பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசிய ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்,

"இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை ஐநா மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை உறுதி செய்த நிலையில், அதனடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை ஒப்புக்கொண்டது. இதுகுறித்து ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையுடன் இணைந்து கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை செயல்படுத்தாதது பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிக்க வேண்டும். இதுகுறித்து சர்வதேச விசாரணை முறையை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அவரது கருத்துகள் மிகவும் சரியானவை. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளைத் தான் அவர் முழுக்க முழுக்க பிரதிபலித்திருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையப் போகின்றன.

ஆனால், அதற்குக் காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை; கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடந்த போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மை என்று ஐநா மனித உரிமை ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்படி வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்களையும் உள்ளடக்கிய நீதிமன்ற விசாரணையை நடத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பது தான் இலங்கைக்கு ஐநா மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் வழங்கிய பணியாகும்.

ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் அந்தக் கடமையை நிறைவேற்றி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு முன்வரவில்லை.

மாறாக, போர்க்குற்றவாளிகளான மகிந்த ராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோரைக் காப்பாற்றும் நோக்குடன், போர்க்குற்றங்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்த முடியாது; 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியிருக்கிறார். இதற்காக 3 சிறப்புத் தூதர்களை அவர் ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இலங்கையில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான அனைத்துக் கதவுகளையும் மூடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இனியும் இலங்கை அரசை நம்பிக் கொண்டிருப்பது அபத்தமாகவே அமையும். போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க மாற்று ஏற்பாடுகளை உலக நாடுகள் ஆராய வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய தருணத்தில் "போர்க்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்பது தான் பன்னாட்டு சட்டம். அதுதான் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கை" என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியிருப்பது ஈழத்தமிழர்களுக்கு சாதகமான திருப்பம் ஆகும்.

அத்துடன், இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய தீர்மானத்தை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைப்பதும் வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இம்முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் துணை நிற்க வேண்டும்.

ஐநா மனித உரிமை ஆணையத் தலைவரின் அறிக்கை மீது இம்மாதம் 20 ஆம் தேதி விவாதம் நடத்தப்பட்டு, 21 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அந்தத் தீர்மானத்தில், போர்க்குற்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை இலங்கைக்கான உத்தரவாக மாற்றம் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஐநா தீர்மானத்தை இலங்கை முறையாக நிறைவேற்றுகிறதா? என்பதை கண்காணிக்க ஐநா மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; போர்க்குற்றங்களை விசாரித்து ஆவணப்படுத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.