எது என்றாலும் கூட்டமைப்புடன் நாம் பேசித் தீர்க்க வேண்டும்! ஹக்கீம் வலியுறுத்தல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா, கல்லரிச்சல் வீதி மற்றும் சிறுவர் பூங்கா, அன்வர் இஸ்மாயில் மாவத்தை காபட் வீதி ஆகியவற்றை நேற்று (10) திறந்து வைத்தபின்னர் உரையாற்றிய அவர்,

இது தேர்தல் வருடமாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நடக்கவிருக்கும் தேர்தலை தாமதப்படுத்தினாலும் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்காவது நாம் முகம்கொடுக்க வேண்டும். இந்த தேர்தல் நாட்டின் அரசியலையே தலைகீழாக மாற்றுகின்ற தேர்தலாக இருக்கும். இதன்போது மீண்டும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். அதைத் தீர்மானிப்பது மக்களாகிய நீங்கள்தான்.

முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் பிரிந்து நின்று ஆசனங்களை வென்றாலும், சமூகம் தோற்றுப்போகக்கூடாது என்பது எல்லோருடைய அடிப்படை விருப்பமாக இருக்கிறது.

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். இதன்போது தமிழ் மக்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டால் இன்னும் ஒருபடி மேலே செல்லலாம்.

வட, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், இப்போது சில்லறைப் பிரச்சினைகள் பல தலைதூக்கத் தொடங்கியுள்ளன. அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் ஆவேசப்பட்டு பேசுவதினால் இரு சமூகங்களும் பிரிந்துவிடக்கூடாது.

இரு சமூகங்களின் மத்தியிலுள்ள பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து தனிப்பட்ட முறையில் யாரும் இந்தப் பிரச்சினைகளை தீர்வுகளை காணமுடியாது என்றார்.