சூடு பிடிக்கும் ஜெனிவா களம்! எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த அலுவலகத்தை சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் குறித்த அலுவலகம் கொழும்பில் என்றாலும் அமைக்கப்பட வேண்டும்.

எனினும் இந்த அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் குறித்த அலுவலகத்தினைச் சுதந்திரமாகச் செயற்பட அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்.

எனவே இவ்விடயத்தினையும் நாம் ஜெனிவாக் கூட்டத்தொடரில் வலியுறுத்த இருக்கின்றோம். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை எமக்கு சற்றே ஆறுதலளிக்கின்றது.

நாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் குறித்த அறிக்கை எம்மை உற்சாகமடையச் செய்திருக்கின்றது.

எனவே இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் காலநீடிப்பு வழங்கப்படக் கூடாதென்பதில் நாம் ஜெனீவாவில் எமது அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரயோகிப்போம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்து எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போது ஜெனிவா களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் அலோசனைக்கு அமைய ஜெனிவா நோக்கி குழு ஒன்று சென்றுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் நடைபெறும் அமர்வுகளில் இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கவுள்ளதாக அரசாங்க தரப்பினர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers