வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து இம்முறை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து, பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வோம்.
இம்முறை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு அறிந்து கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஏமாற்றி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
இந்த தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவினை பெற்றுக்கொண்டு வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இது சம்பந்தமாக ஜனாதிபதி சிறிசேன தரப்பில் இருந்து சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக ஜனாதிபதி சிறிசேனவுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.