எரிபொருளின் விலையை அதிகரிக்க முடியாது: பந்துல குணவர்தன

Report Print Sinan in அரசியல்

தற்போதைய சூழ்நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருளின் விலையை 8 ரூபாயினால் அதிகரிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் 16 வருடங்களின் பின்னர் பொருளாதார வளர்ச்சி 3 வீதமாக காணப்படுகின்றது. 2001ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.3 வீதமாக காணப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுத்த சில முறையற்ற தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரச முதலீடு அவசியம். எனினும், அரச முதலீடு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக சென்று வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் கடனை அரச வங்கிகள் தரப்போவதில்லை. மாறாக வர்த்தக வங்கிகள் ஊடாக அந்தக் கடன்களை வழங்கி, வட்டியை அரசாங்கம் செலுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கடன் தொகையை வழங்குவதற்கான இயலுமை வர்த்தக வங்கிகளுக்கு காணப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

எரிபொருள் விலை நிர்ணயத்தில் விலை சூத்திரத்தை பயன்படுத்துவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சத்திட்டுள்ளது.

நாணய நிதியமே எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியது. நாணய நிதியத்தின் நிதியுதவியில் மேலும் இரண்டு தவணைகளை இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளவுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருளின் விலையை 8 ரூபாயினால் அதிகரிக்க முடியாது. அவ்வாறு அதிகரிக்கப்படுமாயின் மக்களின் எதிர்ப்பினை சமாளிக்க முடியாது.

அதனைவிட எதிர்வரும் மே மாதமே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவுள்ளனர். அவர்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்தியே ஆகவேண்டும்.

ஆகவே தான் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.