சம்பந்தனின் தயவால் மீண்டும் வெற்றி பெற்றார் ரணில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
1383Shares

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்க தமது ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழங்கியுள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 5ஆம் திகதி முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல் பிரமுகர்கள், இந்த வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேசியிருந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இன்று மாலை இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் இந்த வரவு செலவுத்திட்டத்தை தாம் ஆதரிப்பதாக கூட்டமைப்பினர் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் வெற்றியடைந்துள்ளது.

இந்த வாக்கெடுப்பின் போது, 119 வாக்குகள் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளன. இவ் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 76 வாக்களிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியினரும் மகிந்த மற்றும் மைத்திரி அணியினரும் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகிந்த தரப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம் ஆகியோரும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முன்னதாக இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினரும், மகிந்த மைத்திரி தரப்பினரும் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பானது, எந்தவித முன் அறிவித்தலும் இன்றி வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.