ரணிலுக்கு மறைமுக ஆதரவு கொடுத்த மைத்திரி தரப்பினர்!

Report Print Steephen Steephen in அரசியல்

29 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது, மறைமுக ஆதரவை வழங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், அந்த திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்கள் மற்றும் மகிந்த அணியை சேர்ந்த 70 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தராது அதனை பகிஷ்கரித்தனர்.

அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்வார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதனடிப்படையிலேயே அவர்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது தவிர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Latest Offers