கூட்டமைப்பிற்குள் அடுத்த பிளவு? வெளியேறினார் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
2396Shares

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பினைப் புறக்கணித்திருந்தார் என டெலோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 5ஆம் திகதி முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. இதனால் 119 ஆதரவு வாக்குகளினால் வரவு செலவுத்திட்டம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டெலோ,

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பினைப் புறக்கணித்திருந்தார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தனிப்பிரதேச செயலகமாக தரமுயர்த்தபட வேண்டுமென்ற கோரிக்கையின் சார்பாக மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வாக்களிப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தனிப்பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கைகளை மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் அரசாங்கத்திடம் நீண்ட காலமாக முன் வைத்து வந்துள்ளனர். ஆனால் அது வெறும் கோரிக்கைகளாகவும் வாக்குறுதிகளாகவும் மட்டும் நீர்த்துப்போனது. இதனால் தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றமடைந்தே வந்துள்ளனர்.

தொடர்ந்து இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை கடந்த அரசாங்க குழப்பங்களின் பின்னர் மீண்டும் அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு வழங்கும் போது இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதிகள் தரப்பட்ட பின்னரே ஆதரவு நல்கப்பட்டது.

ஆயினும் தொடர்ந்தும் ஏமாற்றமே மிஞ்சி இருப்பதனால் இன்றைய பக்ஜெட் மீதான வாக்கெடுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்துள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

இந்நிலையில், டெலோவின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பினைப் புறக்கணித்திருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பட்ட பிளவினை வெளிப்படுத்துவதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாக்கெடுப்பில் டெலோ கட்சியின் உறுப்பினரான கோடீஸ்வரன் ஆதரவாக வாக்களித்திருந்தும் அக்கட்சியின் கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பினை புறக்கணித்திருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்குள் அண்மையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளும், கொள்கைப் போக்கும் காரணமாக இதுபோன்ற பிளவுகளுக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நலன் விரும்பிகள் கருத்து தெரிவித்துவருகின்றார்கள்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் செல்வம் அடைக்கலநாதனின் இந்தப் புறக்கணிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு பிளவின் வெளிப்பாடு என்கின்றன அரசியல் தகவல்கள்.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பினை டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்துள்ளார் என அக்கட்சியின் ஊடகப் பிரிவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால், அதேகட்சியின் உறுப்பினரான கோடீஸ்வரன் ஆதரவாக வாக்கெடுப்பில் கலந்து கொண்டமை தொடர்பில் எந்தவிதமான தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை.

அப்படியாயின் டெலோ கட்சியிலிருந்து விலகி கோடீஸ்வரன் தமிழரசுக் கட்சியில் இணைந்துவிட்டாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.