தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ இரட்டை முகத்துடன் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற மாநகரசபை கூட்டம் தொடர்பாக இன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் அவர்கள் தேர்தல் காலத்தில் ஒரு போலி முகத்தினையும், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற போது இன்னொரு முகத்தினையும், சபை அமர்வுகளில் மற்றும் நாடாளுமன்றத்தில் இன்னொரு போலி முகத்தினையும் காட்டி வருகின்றனர்.
எனினும் அதனை மாற்ற வேண்டும். ஆகவே எங்களுடைய தீர்ப்பாயம், எங்களுடைய நீதியான கோரிக்கை, எங்களுடைய மக்களுடைய நீதியான கோரிக்கையாகும்.
உண்மையிலே மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களின் கோரிக்கையினை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும்.
யாழ். மாநகர சபையில் பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த தீர்மானங்களின் பயன்கள் எதுவும் பொதுமக்களை சென்றடைவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
குறிப்பாக நிர்வாக சீர்கேடுகள் நிறைந்து காணப்படுவதாகவும் அதனை சீர் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்