அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்!

Report Print Rakesh in அரசியல்
99Shares

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்வர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத்தில் சந்தித்தபோது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

"நான் நாளை (இன்று புதன்கிழமை) வெளிநாடு செல்கின்றேன். வெள்ளியன்று திரும்பி விடுவேன். திரும்பி வந்ததும் அடுத்த வாரத்தில் இது தொடர்பான கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்வோம்'' என்று கூட்டமைப்புக் குழுவினரிடம் தெரிவித்தாராம் ஜனாதிபதி.

ஏற்கனவே அரசமைப்பு உருவாக்கலுக்கான வழிகாட்டுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்பு நகலுக்கான மூல வடிவத்தில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான - சர்ச்சைக்கு உரியதல்லாத விடயங்களைத் தொகுத்துத் தருவதற்காக சுமந்திரன் உட்பட நால்வரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

அந்த விடயங்களை அடையாளம் கண்டு தொகுத்துப் பிரிக்கும் பணியைத் தங்கள் சார்பில் முன்னெடுக்கும் பணியை நால்வர் குழுவின் அங்கத்தவர்களான சரத் அமுனுகமவும், டிலான் பெரேராவும் சுமந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

குழுவின் மற்றைய உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் உரையாடிய பின்னர் அந்தப் பணியை சுமந்திரன் எம்.பி. மேற்கொண்டு, அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு முன்னர் அதற்கான ஆவணத்தைத் தயார் செய்து வைத்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.