வரவு செலவுத் திட்டத்தால் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி, பியசேன கமகே ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேலும் சிலர் ஆதரவாக வாக்களிக்க தயாராகி வருவதால், மைத்திரி தரப்புக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தயாராகி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தற்போது ஆதரவளிக்காதவர்கள் என்பது அவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்காதவர்கள் எனவும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நேரத்திலேயே இவர்கள், ஜனாதிபதியுடன் இணைந்துள்ளனர்.

இதனடிப்படையில், ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஆதரவளித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையாக மாறியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், எந்த நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.