நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கெல்லாம் ஜனாதிபதியே பிரதான காரணம், அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எப்போது ஆட்சிகவிழும் என விழிமீது விழிவைத்து காத்திருப்பதுடன், விரைவில் அது நடந்தாக வேண்டும் என பிரார்த்தனையும் செய்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கப்போவதில்லை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கெல்லாம் ஜனாதிபதியே பிரதான காரணம்.
அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எப்போது ஆட்சிகவிழும் என விழிமீது விழிவைத்து காத்திருப்பதுடன், விரைவில் அது நடந்தாக வேண்டும் என பிரார்த்தனையும் செய்கின்றார்.
அதுமட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நன்மை செய்தால்கூட தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக அதை தடுத்து நிறுத்தி, காலைவாரும் செயலில் இறங்கியுள்ளார்.
வெளிநாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கை, உயர்தர மாணவர்களுக்கு ‘டெப்’ வழங்கும் யோசனை என அனைத்து விடயங்களிலும் எதிர்மறையான பார்வையையே ஜனாதிபதி செலுத்தி வருகிறார். திட்டமிட்ட அடிப்படையில் தடைகளை ஏற்படுத்துகிறார்.
ஆட்சி கவிழவேண்டும், ஐக்கிய தேசியக் கட்சி ஒழிய வேண்டும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வேட்புமனு கிடைக்க வேண்டும் என சிந்திக்கும் ஜனாதிபதி, தான் எதை சொன்னாலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் செவிமடுப்பதில்லை என எமக்கு எதிராக விரல் நீட்டுகின்றார்.
அமைச்சர்கள் மட்டுமல்ல, இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்கூட ஜனாதிபதியின் கருத்துக்கு கட்டுப்படமாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.
பிரதமரின் ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும். ஆனால், தனிப்பட்ட பகைமை காரணமாக எனக்கு அமைச்சுப் பதவி வழங்க அவர் மறுத்துவிட்டார்.
மலிக்சமரவிக்ரம பதவி துறந்த பின்னர், பொன்சேக்காவை அமைச்சராக்குமாறு பிரதமர் கோரினார். ஆனால், வழங்கவே முடியாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்தார்.
அன்று மஹிந்த சிந்தனையை முன்னெடுத்த மஹிந்த, எமது நெஞ்சில்தான் சுட்டார். அவருக்கு எதிராக போராடினோம். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.
இறுதியில் மெதமுலனவில் ஜன்னலில் தொங்கவேண்டியநிலை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், இன்று மைத்திரி சிந்தனை எம் முதுகில் குத்துகின்றது.
ஒட்டகப் படைக்கு, சிங்கம் தலைமைத்துவம் வழங்கினால் போரில் ஒட்டகப்படை வெற்றிபெறக்கூடும். ஆனால், சிங்கப்படைக்கு, ஒட்டகம் தலைமைத்துவம் வழங்கினால் சமரில் வெற்றிபெறமுடியாது.
இந்த அரசிலும் சிங்கம்போல் செயற்படக்கூடியவர்கள் இருக்கின்றனர். ஆனால், ஒட்டகமொன்றே தலைமைத்துவம் வழங்குகின்றது. பிரதமரை அல்ல, அரச தலைவரையே நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.