ரெலோவின் ஒழுங்கு நடவடிக்கை கோடீஸ்வரன் எம்.பி. மீது பாயும்!

Report Print Rakesh in அரசியல்
135Shares

கட்சியின் பொதுக்குழு மற்றும் அரசியல் குழுவின் தீர்மானங்களுக்கு மாறாக இந்த வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்த கோடீஸ்வரன் எம்.பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை விரைவில் பாயும் என ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் தமிழர் தேசம் முழுவதும் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்காமை உட்பட பல விடயங்களில் இந்த அரசு மீது எமக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆகவே வரவு - செலவுத் திட்டத்தில் அரசை ஆதரிப்பதில்லை என்று எமது கட்சியின் பொதுக் குழு தீர்மானித்திருந்தது.

கடந்த வாரம் கூடிய கட்சியின் அரசியல் குழுவும் அதை அங்கீகரித்திருந்தது. அதனை நேற்று செவ்வாயன்று காலையிலும் தொலைபேசி மூலம் எமது கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பியாக அங்கம் வகிக்கும் கோடீஸ்வரனுக்கு எடுத்துரைத்து நினைவூட்டியிருந்தேன்.

எமது கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கட்சி முடிவுக்கு அமைய வரவு செலவுத் திட்டத்தில் அரசை ஆதரிக்கவில்லை. ஆனால், மற்றைய உறுப்பினரான கோடீஸ்வரன் கட்சி முடிவுக்கு மாறாகச் செயற்பட்டிருக்கின்றார். அவரிடம் விளக்கம் கோரப்படும். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை அவர் மீது விரைவில் பாயும் என்று குறிப்பிட்டுள்ளார்.