டிலான் பெரேராவின் அவசரத்தை நிராகரிக்கும் ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

தனக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க முயற்சிக்கும் எந்த நம்பிக்கையும் இல்லாத அரசாங்கத்துடன் ஜனாதிபதி தொடர்ந்தும் இணைந்து செல்ல முடியாது எனவும் இதனால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதிக்கு எந்த தடைகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி அரச தலைவர் என்ற வகையில் அரசாங்கத்தின் தலைவர் என்பதாவும் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடித்தால், பிரதமர் மற்றும் அமைச்சரவையும் கலைந்து போகும்.

இதனடிப்படையில், புதிய பிரதமருடன் புதிய அரசாங்கத்தை ஜனாதிபதிக்கு அமைக்கும் அதிகாரம் உள்ளது எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், பொதுத் தேர்தலை சந்திக்காமல், அரசாங்கத்தை பொறுப்பேற்க தமது தரப்பு தயாரில்லை எனக் கூறியிருந்தார்.

அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றே அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடத்தும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிலைப்பாடும் இன்றி நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

விவாதத்தின் போது வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து உரையாற்றுவதுடன் மேலும் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும் சிலர் நேற்று நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்திருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரவு செலவுத்திட்டம் தொடர்பான விடயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதுள்ளதாகவும் இவ்வாறான கட்சியினை தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது கேலிக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருதுவதாக கூறப்படுகிறது.