ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள யோசனையானது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனவே, அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மற்றும் அவர் சார்பில் ஜெனிவா செல்லும் பிரதிநிதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“மகிந்த ராஜபக்ச காலத்தில் நாம் பொருளாதார தடைக்கு உள்ளாகி இருந்தோம். 10 வருடங்கள் ஆகியும் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அங்கு இவ்வாறான நிலை ஏன் ஏற்பட்டது என்று புரிந்துக்கொள்ளவேண்டும். நாம் இவற்றுக்கு மேலாக செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரும். எமது பொறுப்பு என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஜனாதிபதியை நாமே வெற்றிப்பெற செய்தோம். அவர் அதிகாரங்கள் பலவற்றை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். உயர் நீதி மன்றம் அவ்வாறு செய்யமுடியாது என்றது நாம் எதனையும் செய்யவில்லை.
எல்லையை கடந்து செயற்பட்டால் தலையீடுகள் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளின் பேரவை முக்கியஸ்தர்கள் தெரிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அனைத்து இனத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை முன்னெடுத்தால் பாரிய இறுக்கமான பிரேரனையில் தளர்வை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மாகாண சபையை வலுப்படுத்துவதற்கு அனைவரும் விருப்பம் கொண்டுள்ளனர். இந்த பிரேரணை மாற்ற வேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.