த.தே.கூட்டமைப்பின் ஏதாவதொரு எம்.பி யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்படாரா?

Report Print Sumi in அரசியல்

இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் காலநீடிப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெற உள்ள மாபெரும் போராட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமூகத்தினர் பூரண ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

மீண்டும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும், தமிழின அழிப்புக்கு எதிராகவும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் போராட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளத்தினராகிய நாங்கள் பூரணமான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்றைய தினம் எங்களுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை நிறுத்தி இந்த போராட்டத்திற்கு பூரணமான ஆதரவை தெரிவிப்பார்கள்.

அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்படும். உண்மையில் இந்த தமிழின அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசாங்கம் இது தொடர்பான விசாரணைகள் வேண்டாம் என்று வெளிப்படையாகக்கூறி வருகின்றது.

அதாவது இலங்கையின் அரசியல் நிலவரங்களை பார்க்கின்ற பொழுது ஜனாதிபதி ஒரு கதையையும், பிரதமர் வேறொரு கதையையும் தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் எங்களுடைய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இந்த தமிழின அழிப்புக்கு எதிரான விடயத்தில் அரசாங்கத்தோடு சேர்ந்து இருப்பது உண்மையில் வேடிக்கையான விடயமாக இருக்கிறது.

உண்மையிலே இந்த யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். குறிப்பாக நாங்கள் இந்த யுத்தத்தில் நேரடியாக பாதிப்புகளை சந்தித்தவர்கள்.

யுத்தத்தில் இடம்பெற்ற இழப்புக்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள அல்லது ஏதாவது ஒரு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாக பாதிப்பு ஏற்பட்டது என்பதை வெளிப்படையாகக் கூற முடியுமா எனவும் சவால் விடுத்துள்ளார்.