திடீர் திருப்பத்தில் மகிந்த! அமெரிக்கத் தூதுவரை சந்தித்ததன் பின்புலம் என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் தானும் இணைந்து அமெரிக்கத் தூதுவரை சந்தித்துப் பேசியதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,

அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. இதன் நிமிர்த்தமாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இதேவேளை, பல்வேறு நாடுகளின் தூதுவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசவுள்ளோம். அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு எப்போது இடம்பெற்றது என்ற விபரத்தை வெளியிடவில்லை.

சீன அரசாங்கத்துடன் நெருங்கி தொடர்பினை வைத்திருக்கும் மகிந்த ராஜபக்ச தரப்பினர், அமெரிக்கத் தூதுவரை சந்தித்துப் பேசியது அரசியலில் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் திறவுகோலாக இருந்தது. இந்நிலையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து இத்தனை நாட்களுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் அமெரிக்கத் தூதுவரை சந்தித்தமையானது, அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

எவ்வாறாயினும் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மகிந்தவின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.