அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் டக்ளஸ் கேட்டுக் கொண்டது! ஏற்றிருந்தால்?

Report Print Sumi in அரசியல்

மக்களின் அழிவை தடுக்க அரசுடன் பேசுவோம் வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் டக்ளஸ் தேவானந்தா வினயமாக கேட்ட போது யாரும் அதற்கு செவிசாய்த்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் யாழ். மாநகரசபையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு அவகாசம் வழங்கக்கூடாது என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டினால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடானது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் இருந்துவருகின்றது. ஆனால் சபையில் எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பான கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதால் இவ்விடயம் தொடர்பில் நாம் எமது கருத்தை தெளிவுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அது தொடர்பாக தெளிவுகொடுக்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என்று போலிப் போர்க்குரல் எழுப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு நாட்டைவிட்டு தப்பியோடியவர்களும், கொழும்பிலே குண்டு போடுவோம் என்று போர்முழக்கம் செய்து, எரியும் நெருப்பிலே எண்ணை ஊற்றி விட்டு மக்களை யுத்தத்தில் அழியவிட்டு ஓடியவர்களும், எமது மக்களின் அழிவுகள் குறித்து ஒரு வாய்திறக்க தகுதியானவர்களா என்பதை அவரவர்கள் தங்களை உரசிப்பார்க்க வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காக எமது மக்களை உசுப்பேற்றி வாக்குகளை சூறையாடி அழிவு யுத்தத்திற்கு ஆதரவளித்த இந்த தரப்பினரும் யுத்தக்குற்றவாளிகள் தான். யுத்தம் எமது மக்களை முள்ளி வாய்க்கால்வரை கொண்டுசென்று அழித்துக் கொண்டிருக்கும் போது உயிரைக்காக்க ஓலம் இட்டு அழுதபோது எந்த சர்வதேச சமூகம் இங்கு வந்து அவர்களை காத்தது?

வன்னியை நோக்கிய படை நகர்வு ஆரம்பித்த போது மனிதப்பேரவலம் ஒன்று நிகழப்போகின்றதை உணர்ந்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களின் அழிவை தடுக்க அரசுடன் பேசுவோம் வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வினயமாக கேட்ட போது யாரும் அதற்கு செவிசாய்த்திருக்கவில்லை.

அவ்வாறு அன்று சக தமிழ் கட்சி தலைமைகள் வந்திருந்தால் அவர்களும் இன்று மக்களின் அழிவு குறித்தும் இனப்படுகொலை குறித்தும் பேசுவதற்கு உருத்துடையவர்களாக இருந்திருப்பார்கள்.

வன்னியில் யுத்த சூழலுக்குள் அகப்பட்டு அம்புகள் தைத்த மான்களாக எமது மக்கள் அவலப்பட்டு சாகையில், யுத்த பிரதேசத்தை விட்டு மக்களை வெளியேற அனுமதியுங்கள் என்று குரல் எழுப்பி நாங்கள் வடக்கில் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தியிருந்தோம். அது போன்ற எதிர்ப்பு ஊர்வலங்களை அன்று நடத்துவதற்கு முன்வந்திருந்தால் சக தமிழ் கட்சிகளும் இன்று மக்களின் அழிவுகள் குறித்து பேசுவதற்கு அருகதையிருந்திருக்கும்.

வன்னிப்பேரவலம் நடந்த போது சக தமிழ் கட்சிகள் சார்பாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். சர்வதேச விசாரணை குறித்த பிரேரணையை கொண்டு வரும் கட்சியினரும் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்) அதில் இருந்திருக்கிறார்கள்.

அரசியல் பலத்தோடு இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாராவாது ஒருவர் இனப்படுகொலையை நிறுத்த கோரி உங்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை தூக்கி எறிந்துவிட்டு இராஜினாமா செய்து கொள்ள ஏன் முன்வந்திருக்கவில்லை?

அவ்வாறு நீங்கள் 22 பேரும் மக்கள் மீதான அழிவை எதிர்த்து உங்கள் பதவிகளை தூக்கி எறிந்திருந்தால் உங்களோடு சேர்ந்து 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இணைத்து தனது எதிர்ப்பை காட்ட தயாராகவே இருந்தவர். அவ்வாறு நீங்கள் அன்று நடந்திருக்கவில்லை?

அப்படி நீங்கள் நடந்திருந்தால் இன்று நீங்களும் மக்களின் அழிவுகள் குறித்து பேசுவதற்கு உருத்துடையவர்களாக இருந்திருப்பீர்கள்.

ஆகவே, நடந்து முடிந்த யுத்த அழிவுகளுக்கு நீங்களும் காரணமானவர்களே என்ற உண்மையை ஏற்று எமது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்டு சர்வதேச விசாரணை குறித்த விடயத்தை தூய மனதோடு பேசுங்கள் .

எமது மக்களுக்கு நீதி தேவை இழப்புகளுக்கு உரியதான ஈடேற்றம் தேவை!! இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றும் உறுதியாகவே இருக்கின்றது. எமது இனத்தின் மீதான மனிதப்பலிகளுக்கும், எமது மக்கள் சந்தித்த பேரிழப்புக்களுக்கும் ஈடாக நாம் விரும்புவது எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும், வீழ்ந்த நம் தேசத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தும் தேச மீள் எழுச்சியுமே ஆகும்.

சர்வதேச விசாரணையின் ஊடாக எமது மக்களின் இந்த இலட்சிய கனவுகள் ஈடேறுமேயானால் அதை நாம் வரவேற்க தயாராகவே இருகின்றோம். ஆனாலும் அவை 1983 ஆம் ஆண்டுகாலத்தில் இருந்த நடந்தேறிய சம்பவங்களையும் உள்ளடக்கியதாக அமைவேண்டும்.

அந்தவகையில் உள்நாட்டில் உரிமைகளை பேசி பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளை அடைத்து மூடி விட்ட நிலையில் வழிமுறைக்கு வந்தவர்கள் கூட எதையும் அடைவதற்கான பொறிமுறைகளை கையாள திறனற்று நிற்கும் சூழலில், சர்வதேசத்தை மட்டும் நோக்கி வெறுமனே மன்றாடுவது எமது மக்களின் கனவை வெல்ல வழிவகுக்குமா? என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஏற்கனவே சர்வதேச விசாரணைகள் குறித்து வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் யாவும் வெறும் குப்பைக்கூடைக்குள் மட்டும் வீசப்பட்டுவிட்ட நிலையில். ஐநாவில் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை வெறுமனே ஒரு தேர்தல் கோசமாக மட்டும் உச்சரிக்காமல் அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற அடிப்படியில் இருந்து நாம் சர்வதேசத்தின் அனுசரனையை மட்டும் எமது பக்கம் வென்றெடுக்க நாம் என்றும் உறுயுடன் உழைப்போம் என்றார்.