ராஜதந்திர ரீதியில் அடிவாங்கிய இலங்கை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மனிதவுரிமைகள் பேரவையில் பிரித்தானியா கொண்டுவரும் தீர்மானத்தை இலங்கை தரப்பு இருவேறு கோணத்தில் எடுத்துக் கொள்வதானது சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்கிரமாராச்சி எச்சரித்துள்ளார்.

மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா கொண்டுவரவுள்ள தீர்மானம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது பேசிய அவர்,

ஜெனீவாவில் பிரித்தானியா புதிதாகக் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவத்தினரை அவர்களது நாட்டில் கைது செய்வது குறித்த அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அத்தியாயம் மிகவும் ஆபத்தானது. அதுமாத்திரமன்றி, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்தக் கருத்துக்களை நோக்கினால், நமது உள்ளக விவகாரங்கள் எந்தளவு தூரத்திற்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பில் இலங்கையிலிருந்து இருவேறு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.

ஜனாதிபதி சார்பாக ஒரு தரப்பும், பிரதமர் ரணில் சார்பாக இன்னொரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இது சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியில் எமக்கு விழுந்துள்ள பலத்த அடியாகவே பார்க்க வேண்டும்.

எமது உள்ளகப் பிரச்சினையில் சர்வதேசம் எவ்வாறு தலையிடுகின்றது என்பதை அண்மைய அறிக்கை புலப்படுத்துகின்றது என்றார்.