சுதந்திரக்கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்த அஞ்சும் பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது நடந்ததை பார்க்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணியை ஏற்படுத்துவது சம்பந்தமாக தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட்ட பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது நடந்தது போல் நடக்கலாம்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி காலை இணக்கம் வெளியிட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அவர்கள் ஓடி மறைந்து கொண்டனர் என திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா, வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தினம் முற்பகல் 11 மணிக்கு மகிந்த ராஜபக்ச தலைமையில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தயாசிறி ஜயசேகர உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இணங்கியதாக கூறியுள்ளார்.