தவறு என்று தெரிந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும் ஆதரவு! நாடாளுமன்ற உறுப்பினர் கவலை

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளை பார்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவது குறித்து கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் மனநிலையை புரிந்துக்கொள்ளுமாறு நாங்கள் மிக கௌரவமான முறையில் கோரிக்கை விடுக்கின்றோம். வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை அரசாங்கம் அமைதியாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இரண்டாம் முறை வாசிப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர், 5 ஆம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலையை அதிகரித்தது. அரசாங்கத்தின் மனநிலை புரிந்துக்கொள்ளுங்கள்.

அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிக்க தயாராக இருந்தது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கவிருந்ததால், அரசாங்கம் அமைதியாக இருந்தது. கடனில் வாழும் மனநிலையில் அரசாங்கம் செயற்படும் போது, இதனை விட வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது” எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.